சிஎஸ்கே படுசொதப்பல் – ரோஹித், சூர்யகுமார் அதிரடியில் மும்பை அபார வெற்றி! | ஐபிஎல் 2025 | Mumbai Indians beats Chennai Super Kings by 9 wickets IPL 2025
 
நடப்பு ஐபிஎல் சீசனின் 37-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வீழ்த்தியது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் இறங்கிய சிஎஸ்கே அணியின் ஷேக் ரஷீத், ரச்சின் ரவீந்திரா இன்னிங்ஸை தொடங்கினர். ரஷீத் 19 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 5 ரன்களும் எடுத்தனர்.
புதியவரான ஆயுஷ் மாத்ரே 15 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து கவனம் ஈர்த்தார். அடுத்து இறங்கிய ஜடேஜா, துபே இருவரும் அரை சதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். கேப்டன் தோனி, ஜேமி ஓவர்டன் இருவரும் தலா 4 ரன்கள் எடுத்தனர். இப்படியான 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது.
177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. ஓப்பனிங் இறங்கிய ரிக்கல்டன் 26 ரன்களுடன் வெளியேறினார். இம்பாக்ட் வீரராக இறங்கிய ரோஹித் சர்மா இந்த சீசனில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிரடி காட்டினார். கடந்த போட்டிகளில் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்திய அவர், அதற்கெல்லாம் சேர்த்தாற்போல், இந்த போட்டியில் அபாரமாக ஆடினார். 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரி என 45 பந்துகளுக்கு 76 ரன்கள் குவித்து அசத்தினார். மறுமுனையில் ஆடிய சூர்யகுமார் யாதவும் தன் பங்குக்கு 30 பந்துகளில் 68 ரன்கள் விளாசினார்.
ஃபீல்டிங்கை பொறுத்தவரை சிஎஸ்கே அணி படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. வீரர்கள் தொடர்ந்து கேட்ச்களையும், பவுண்டரிகளையும் தவறவிட்டனர். இதுவே மும்பை அணிக்கு மிகப்பெரிய சாதகமாக அமைந்தது. 15 ஓவர்களில் 9 விக்கெட் வித்தியாசத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டி சிஎஸ்கே அணியை துவம்சம் செய்தது மும்பை இந்தியன்ஸ் அணி
 
						 
			