EBM News Tamil
Leading News Portal in Tamil

கோலி, படிக்கல் அபார கூட்டணி: பஞ்சாப் கிங்ஸை வென்ற ஆர்சிபி | kohli devdutt padikkal fifty rcb beat punjab kings in match 37 ipl 2025


சண்டிகர்: நடப்பு ஐபிஎல் சீசனின் 37-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 7 விக்கெட்டுகளில் வீழ்த்தியது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி பேட்ஸ்மேன்கள் விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் இணைந்து 103 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

சண்டிகரில் உள்ள முலான்பூர் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் பந்து வீச முடிவு செய்தார். பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது.

முதல் விக்கெட்டுக்கு 42 ரன்கள் சேர்த்தனர் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பிரியன்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங். அந்த சூழலில் ஆர்சிபி ஆல்ரவுண்டர் க்ருணல் பாண்டியா, அடுத்தடுத்த ஓவர்களில் அவர்கள் விக்கெட்டை கைப்பற்றினார். பின்னர் சீரான இடைவெளியில் பஞ்சாப் கிங்ஸ் அணி விக்கெட்டுகளை இழந்தது.

பிரப்சிம்ரன் 17 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். ஜாஷ் இங்கிலிஸ் 29, ஷஷாங் சிங் 31, மார்க்கோ யான்சன் 25, பிரியன்ஷ் 22 ரன்கள் எடுத்தனர். ஆர்சிபி தரப்பில் க்ருணல் பாண்டியா மற்றும் சுயாஷ் சர்மா தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ரொமாரியோ ஷெப்பர்ட் 1 விக்கெட் வீழ்த்தினார்.

158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. முதல் ஓவரில் 1 ரன்னில் ஆட்டமிழந்தார் ஆர்சிபி வீரர் பிலிப் சால்ட். அதன் பின்னர் 2-வது விக்கெட்டுக்கு இணைந்த விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல், 103 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். படிக்கல் 35 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் பட்டிதார் 12 ரன்களில் வெளியேறினார். இறுதிவரை ஆட்டமிழக்காத கோலி, 54 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தனர். ஜிதேஷ் சர்மா 11 ரன்கள் எடுத்தார்.

18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது ஆர்சிபி. இதன் மூலம் 7 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது ஆர்சிபி. இந்த வெற்றிக்கு பிறகு ஆர்சிபி அணி புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு முன்னேறி உள்ளது. ஆட்ட நாயகன் விருதை கோலி வென்றார்.