EBM News Tamil
Leading News Portal in Tamil

ராஜஸ்தானுக்கு 181 ரன்கள் இலக்கு: லக்னோவின் மார்க்ரம், பதோனி, சமத் அசத்தல் | RR vs LSG | lucknow super giants scored runs versus rajasthan royals ipl 2025


ஜெய்ப்பூர்: நடப்பு ஐபிஎல் சீசனின் 36-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இந்த ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் லக்னோ மிட்செல் மார்ஷ் மற்றும் எய்டன் மார்க்ரம் இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். லக்னோ அணியின் பலமே டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தான். ஆனால், இந்த ஆட்டத்தில் அணியின் டாப் ஆர்டரில் மூன்று பேர் ஏமாற்றம் அளித்தனர்.

மார்ஷ் 4 ரன்கள், நிக்கோலஸ் பூரன் 11 ரன்கள், கேப்டன் ரிஷப் பந்த் 3 ரன்களில் வெளியேறினர். அதன் பிறகு இம்பேக் வீரராக களம் கண்ட ஆயுஷ் பதோனி உடன் இணைந்து 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் மார்க்ரம். அது அந்த அணிக்கு மிகவும் முக்கியமானதாக அமைந்தது. 45 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து மார்க்ரம் ஆட்டமிழந்தார். 34 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆயுஷ் பதோனி ஆட்டமிழந்தார்.

20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி. ராஜஸ்தான் பவுலர் சந்தீப் சர்மா வீசிய கடைசி ஓவரில் 27 ரன்கள் எடுத்தது லக்னோ அணி. அதில் 26 ரன்களை சமத் சாமர்த்தியமாக ஸ்கோர் செய்திருந்தார். 6, 6, 2, 6, 6 என அந்த ஓவரில் அவர் ரன் எடுத்தார்.

இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற 181 ரன்கள் தேவை. 10 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார் அப்துல் சமத். 8 பந்துகளில் 7 ரன்கள் எடுத்தார் டேவிட் மில்லர். ராஜஸ்தான் தரப்பில் ஹசரங்கா 2 விக்கெட் கைப்பற்றினார். ஆர்ச்சர், சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.