EBM News Tamil
Leading News Portal in Tamil

புள்ளிகள் பட்டியலில் டாப்பில் உள்ள டெல்லி – குஜராத் இன்று பலப்பரீட்சை | tabel toppers delhi capitals gujarat titans to play today match preview ipl 2025


அகமதாபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் முதல் இரு இடங்களில் உள்ள டெல்லி கேப்பிடல்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இறுதிக்கட்ட ஓவர்களில் அசத்தி வரும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வேகம் மிட்செல் ஸ்டார்க்கிற்கும், தொடக்க ஓவர்களில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் முகமது சிராஜுக்கும் இடையிலான மோதலாக பார்க்கப்படுகிறது.

அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி 6 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, ஒரு தோல்வியுடன் 10 புள்ளிகளை குவித்து பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதேவேளையில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் 6 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 2 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. டெல்லி அணி தனது கடைசி ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தியிருந்தது.

வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் நெருக்கடியான சூழ்நிலையில் சூப்பர் ஓவர் உட்பட 3 ஓவர்களில் பல யார்க்கர்களை வீசி அணியின் வெற்றியில் பிரதான பங்கு வகித்தார். அதிலும் கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணிக்கு 9 ரன்களே தேவையாக இருந்த நிலையில் 8 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து போட்டியை சூப்பர் ஓவருக்கு எடுத்துச் சென்றார். அங்கேயும் அற்புதமாக செயல்பட்டு ராஜஸ்தான் அணியை எழுச்சி அடையவிடாமல் பார்த்துக் கொண்டார்.

நடப்பு தொடரில் 10 விக்கெட்கள் வீழ்த்தி உள்ள மிட்செல் ஸ்டார்க் இதனால் இன்றைய ஆட்டத்திலும் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தி டெல்லி அணிக்கு பலம் சேர்க்கக்கூடும். அவருடன் முகேஷ் குமார், மோஹித் சர்மா ஆகியோரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் ஷுப்மன் கில், சாய் சுதர்சன், ஜாஸ் பட்லர் ஆகியோரை உள்ளடக்கிய குஜராத் அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கலாம். சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ், விப்ராஜ் நிகாம் ஆகியோர் பலம் சேர்க்கக்கூடும்.

குஜராத் அணி தனது கடைசி ஆட்டத்தில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிடம் வீழ்ந்திருந்தது. டாப் ஆர்டர் பேட்டிங்கில் சாய் சுதர்சன் 6 ஆட்டங்களில் விளையாடி 4 அரை சதங்களுடன் 329 ரன்கள் வேட்டையாடி நடப்பு சீசனில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். 31 பவுண்டரிகள் விரட்டி உள்ள அவர், 13 சிக்ஸர்களையும் பறக்கவிட்டுள்ளார். அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த மட்டை வீச்சு வெளிப்படக்கூடும்.

குஜராத் அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் வலுவாக காணப்படும் நிலையில் நடுவரிசை பலம் இழந்து காணப்படுகிறது. லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் சாய்சுதர்சன், ஷுப்மன் கில் ஜோடி 12 ஓவர்களில் 120 ரன்கள் வேட்டையாடியது. ஆனால் இவர்கள் ஆட்டமிழந்ததும் அடுத்த 8 ஓவர்களில் நடுவரிசை பேட்ஸ்மேன்களால் மேற்கொண்டு 60 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் ஷெர்ஃபேன் ரூதர்போர்டு, ஷாருக்கான், வாஷிங்டன் சுந்தர், ராகுல் டெவாட்டியா ஆகியோரை உள்ளடக்கிய நடுவரிசை பேட்டிங் பலம் பெறுவது அவசியம்.

பந்துவீச்சை பொறுத்தவரையில் தொடக்க ஓவர்களில் முகமது சிராஜ் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். டெஸ்ட் போட்டிக்கான லென்ந்த்தில் வீசுவது அவரது பலமாக உள்ளது. நடப்பு தொடரில் ஓவருக்கு சராசரியாக 8.50 ரன்களை வழங்கியுள்ள சிராஜ் 10 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அதிலும் பவர்பிளேவில் சிறப்பாக செயல்பட்டு எதிரணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.

இன்றைய ஆட்டத்தில் அவர், அனுபவம் குறைந்த டெல்லி அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களான ஜேக் பிரேசர் மெக்கர்க், அபிஷேக் போரெல் ஜோடிக்கு சவால்தரக்கூடும். சிராஜுக்கு உறுதுணையாக பிரசித் கிருஷ்ணாவும் நம்பிக்கை அளிக்கக்கூடியவராக திகழ்கிறார். சுழற்பந்து வீச்சில் சாய் கிஷோர் அழுத்தம் கொடுக்கக்கூடும். தடுமாறி வரும் ரஷித் கான் பார்முக்கு திரும்பினால் அணியின் பந்துவீச்சு பலம் மேலும் அதிகரிக்கும்.

டெல்லி அணியின் பேட்டிங் வரிசையில் தொடக்க வீரரான ஜேக் பிரேசர் மெக்கர்க் 6 ஆட்டங்களில் 55 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் போரெல் 156 ரன்கள் எடுத்துள்ளார். பிரேசர் மெக்கர்க் விரைவாக விக்கெட்டை பறிகொடுப்பது வாடிக்கையாக உள்ளது. அபிஷேக் போரெல் பவர்பிளேவில் அதிரடியாக விளையாடினாலும் அவரிடம் சீரான செயல் திறன் இல்லை.

எனினும் கருண் நாயர், கே.எல்.ராகுல், அக்சர் படேல் ஆகியோர் நடுவரிசையிலும், பின் வரிசையில் அஷுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகாம் ஆகியோரும் தாக்குதல் ஆட்டம் தொடுப்பவர்களாக திகழ்வதால் தொடக்க பேட்ஸ்மேன்களின் பலவீனம் இதுரை டெல்லி அணியை பெரிய அளவில் பாதிக்கவில்லை. அக்சர் படேல் உள்ளநாட்டு கிரிக்கெட் போட்டிகளில் குஜராத் அணிக்காக அகமதாபாத் ஆடுகளத்தில் அதிக ஆட்டங்களில் விளையாடி உள்ளார். மேலும் கடந்த ஆட்டத்தில் அவர், 14 பந்துகளில் 34 ரன்களை விளாசி சரியான நேரத்தில் பார்முக்கு திரும்பியிருந்தார். அவரிடம் இருந்து மேலும் ஒரு தாக்குதல் ஆட்டம் வெளிப்படக்கூடும்.