EBM News Tamil
Leading News Portal in Tamil

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பயணிகளுக்காக அமைகிறது நூலகம்! | library being set up for passengers at Madurai Mattuthavani busstand 


மதுரை: மதுரை மாட்டுத்தவாணி பேருந்து நிலையத்தில் பேருந்துகளுக்காக காத்திருக்கும் பயணிகள், அந்த நேரத்தை பயனுள்ள முறையில் பயன்படுத்த, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் முதல் முறையாக நூலகம் அமைக்கப்பட உள்ளது.

தென் தமிழகத்தில் மிகப் பெரிய பேருந்து நிலையமாக மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் உள்ளது. இந்த பேருந்து நிலையத்தை, கடந்த 1999-ம் ஆண்டு மே 25-ம் தேதி அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி திறந்து வைத்தார். இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு 725 அரசு தொலைதூர பேருந்துகளும், நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் தொலைதூர பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

மாநகரின் பிற பகுதிகளுக்ககு 1,300 மாநகரப் பேருந்துகளும் இந்த பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. தூங்கா நகரம் என்ற பெயருக்கு ஏற்றதுபோல், இந்த பேருந்து நிலையத்தில் இருந்து 24 மணி நேரமும் மாநகர பேருந்துகளும், தொலைதூர பேருந்துகளும் ஓய்வின்றி இயக்கப்படுவதால் பேருந்து நிலையத்தில் எந்த நரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்துகளுக்காக காத்திருப்பார்கள்.

அவர்களுக்கான குடிநீர், கழிப்பறை வசதிகள் சுகாதாரமில்லாமல் இருந்தது. மாநகராட்சி ஆணையர் சித்ரா, சமீபத்தில் பேருந்து நிலையத்தை பார்வையிட்டு, பயணிகள் கழிப்பறைகளை சுகாதாரமாக பயன்படுத்தும் வகையில் பராமரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், கழிப்பறை தொடர்பான புகார்களை பயணிகள், நேரடியாக ஆணையாளருக்கு க்யூஆர் கோர்டு மூலம் தெரிவிக்கும் வசதியையும் தற்போது ஏற்படுத்தி உள்ளார். மேலும், மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தை சேதமடைந்த மேற்கூரை, நடைபாதை, வளாக சாலைகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் இந்த பேருந்துநிலையம் ‘ஐஎஸ்ஓ’ தரச்சான்று பெற்ற பேருந்து நிலையமாக பெருமையுடன் செயல்பட்டது. காலப்போக்கில் போதுமான பராமரிப்பு இல்லாமல் இந்த பேருந்து நிலையம், தன்னுடைய ‘ஐஎஸ்ஓ’ தரச்சான்று அங்கீகாரத்தை இழந்தது. இந்நிலையில், அந்த அங்கீகாரத்தை மீண்டும் பெறுவதற்கு ஆணையாளர் சித்ரா, தேவையான நடவடிக்கைளையும் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக, தற்போது மதுரை மாட்டுத்தவாணி பேருந்து நிலையத்தில் பேருந்துகளுக்காக காத்திருக்கும் பயணிகள், அந்த நேரத்தை பயனுள்ள முறையில் பயன்படுத்த, மாநகராட்சி நிர்வாகம் நூலகம் அமைக்க உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் விழாக் காலங்கள், முகூர்த்த நாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் மட்டுமில்லாது சாதாரண நாட்களிலே பேருந்துகளுக்காக பயணிகள், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய உள்ளது. குறைந்தப்படசம் அரை மணி நேரம் பேருந்துக்காக பயணிகள் காத்திருக்கிறார்கள். புத்தக வாசிப்பில் ஆர்வம் உள்ள பயணிகள், இந்த நேரத்தை பயனுள்ள முறையில் பயன்படுத்த, ஆணையர் சித்ரா, பேருந்து நிலையத்தில் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதற்காக பேருந்து நிலையத்தில் ஒரு அறை தயார் செய்து, அதில் பயணிகள் அமர்ந்து படிக்க இருக்கைகள் போட்டு, நாளிதழ்கள், புத்தகங்கள், வாங்கி போடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, மாநகராட்சி நிர்வாகம் ஓர் அறையை தயார் செய்து வருகிறது. மாவட்ட நூலகத் துறை அதிகாரியையும் நேரில் அழைத்து அவரிடம் நூலகம் அமைப்பதற்கான ஆலோசனையை ஆணையர் மேற்கொண்டுள்ளார்.

நூலகத் துறையில் இருந்தும் புத்தகங்களும் பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நூலகத் துறை சார்பில் மாவட்டத்தில் 100 இடங்களில் நூலகங்கள் அமைக்க முடிவு செய்து அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைக்க ஏற்பாடுகள் நடக்கிறது. ஆனால், இந்த திட்டத்தில் துரிதமாக நடந்தால் அந்த திட்டத்திலேயே பேருந்து நிலையத்தில் நூலகம் திறக்க ஏற்பாடு செய்யப்படும். அவர்கள் தாமதம் செய்யும் பட்சத்தில், மாநகராட்சியே நேரடியாக பேருந்து நிலையத்தில் நூலகத்தை திறந்து நடத்துவதற்கு ஏற்பாடு செய்ய உள்ளது” என்றனர்.