“என்னை நீக்க 10 விநாடிகளையே எடுத்துக் கொண்டனர்” – பென் ஃபோக்ஸின் ஆறாத மனக்காயம் | They took 10 seconds to fire me – Former England wicker-keeper Ben Foakes
இங்கிலாந்து கிரிக்கெட் அணி பிரெண்டன் மெக்கல்லம் பயிற்சிக் காலத்தில் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் சில பல அதிரடி முடிவுகளை எடுத்தனர். அதில் சில முடிவுகள் வரவேற்பை அளித்தாலும் சில முடிவுகள் உண்மையில் அராஜகமானவையாக அங்கு விமர்சிக்கப்பட்டு வருகின்றன.
பென் ஃபோக்ஸ் என்ற விக்கெட் கீப்பர், அவர் ஆடிய வரையில் இங்கிலாந்துக்கு நன்றாகவே பங்களிப்புச் செய்துள்ளார். கடினமான தருணங்களில் பயனுள்ள பங்களிப்புகளைச் செய்து தன்னுடைய இன்றியமையாமையை அவர் நிரூபித்தே வந்தார். ஆனாலும், அவரை இங்கிலாந்தின் புதிய நிர்வாகம் ஏற்றுக் கொள்ளாமல் புறமொதுக்கி விட்டனர்.
முக்கியப் பங்களிப்பு செய்த பென் ஃபோக்ஸிற்கு எந்த ஓர் அங்கீகாரமும் அளிக்காமல் ஒரு தொலைபேசி அழைப்பில் 10 விநாடிகளிலேயே அவரை அணியிலிருந்து தூக்கியுள்ளது இங்கிலாந்து அணித் தேர்வுக்குழு மற்றும் மெக்கல்லம் / ஸ்டோக்ஸ் அண்ட் கோ. 32 வயதாகும் பென் ஃபோக்ஸ் 26 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். கடைசியாக இந்தியாவில் கடினமான தொடரில் தரம்சலாவில் ஆடினார்.
கிளாசிக்கல் வார்ப்பில் உருவான விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸ். அதே போல் பேட்டிங்கில் இப்போதைய அசட்டுத் தைரியத்தை விட உறுதியையும் நம்பகத்தன்மையையும் நம்பியவர். ‘பாஸ்பால்’ என்ற ஒரு மட்டமான உத்தியைக் கடைப்பிடித்து வரும் திமிரெடுத்த இங்கிலாந்து அணி நிர்வாகத்தின் மெத்தனப்போக்கின் வெளிப்பாடாக பென் ஃபோக்ஸ் சொல்லாமல் கொள்ளாமல் அப்படியே ஒரங்கட்டப்பட்டார்.
ஏன் ஒதுக்கப்பட்டார் என்பதற்கான காரணங்களையும் சொல்லவில்லை. அதுதான் பென் ஃபோக்சை மிகவும் மன உளைச்சலுக்கு இட்டுச் சென்றுள்ளது, “நான் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளேன் என்பது எனக்கு சூசகமாகப் புரிந்தது. அவர்கள் ஆடும் விதம் கண்டு எனக்கே புரிந்தது. எனவே எனக்குச் சொல்லித் தெரிய வைக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இப்படிப்பட்ட நிலை வரும் என்று எனக்கு தெரிந்தே இருந்தது. பிறகு ஒரு 10 விநாடி தொலைபேசி அழைப்பில் நான் ட்ராப் என்று கூறினர். அதன் பிறகு ஒப்பந்த வீரர்கள் பட்டியலிலும் நான் இல்லை.
உத்வேக அளவில் இது மாதிரியான ஒரு நிலைக்கு என்னைத் தள்ளியிருப்பதுதான் என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இங்கிலாந்துக்கு என்னால் இன்னும் ஆட முடியும் மீண்டும் உள்ளே வர முடியும் என்றுதான் நான் நினைத்திருந்தேன். அதுதான் என்னைச் செலுத்தும் சக்தி, ஆனால் அவர்கள் வேறு பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள், எனக்கான வாய்ப்பு அவ்வளவுதான்.
எனக்கு இந்த அனுபவம் மிகவும் கடினமாக உள்ளது. கடந்த காலத்தில் மீண்டும் அணிக்குள் வர முடியும் என்ற நிலை இருந்தது, இப்போது அப்படி அல்ல. எனவே எனக்கு இனி வாய்ப்பு இல்லை என்றே கருதுகிறேன்” என்று பரிதாபத்துடன் புலம்பியுள்ளார் பென் ஃபோக்ஸ்.
இவரது நிலைமையை இந்திய அணித்தேர்வுக் குழுவின் மனோநிலைக்கு தகவமைத்தால் இங்கு கருண் நாயருக்கு நிகழ்ந்தது, இப்போது சர்பராஸ் கானுக்கும் நிகழப்போகிறது என்ற யூகத்தை வலுப்படுத்துகிறது.