தடுமாறும் ராஜஸ்தானுடன் இன்று மோதல்: தோல்வியில் இருந்து மீளும் முனைப்பில் டெல்லி | Delhi captials to face struggling Rajasthan royals today match preview ipl 2025
புதுடெல்லி: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடடிரில் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகிறது.
அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்திய நிலையில் தனது கடைசி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 205 ரன்கள் இலக்கை துரத்திய அந்த ஆட்டத்தில் டெல்லி அணி 10 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் குவித்திருந்தது. ஆனால் அதன் பின்னர் கடும் சரிவை சந்தித்து 193 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியடைந்தது. இறுதிக்கட்டத்தில் நிகழ்ந்த ஹாட்ரிக் ரன் அவுட்களும் டெல்லி அணி வெற்றியை தாரை வார்ப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இந்த தோல்வியில் இருந்து டெல்லி அணி மீண்டுவர முயற்சிக்கக்கூடும் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் கருண் நாயர் 40 பந்துகளில் 89 ரன்களை விளாசி மிரட்டியிருந்தார். அவரிடம் இருந்து மேலும் ஒரு உயர்மட்ட செயல் திறன் வெளிப்படக்கூடும். கே.எல்.ராகுல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அஷுதோஷ் சர்மா விப்ராஜ் நிகாம் ஆகியோர் கடந்த ஆட்டத்தில் முக்கியமான கட்டங்களில் தங்களது விக்கெட்களை பறிகொடுத்தனர். இவர்கள் இன்றைய ஆட்டத்தில் கூடுதல் முனைப்புடன் செயல்படக்கூடும்.
தொடக்க வீரர்களில் இஷான் போரெல் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆனால் ஜேக் பிரேசர் மெக்கர்க் விரைவிலேயே விக்கெட்டை பறிகொடுப்பது வாடிக்கையாக உள்ளது. நடப்பு சீசனில் அவர் 46 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். 2 ஆட்டங்களில் ரன்கள் ஏதும் எடுக்காமல் நடையை கட்டியுள்ளார். இதனால் கே.எல்.ராகுல் மீண்டும் தொடக்க வீரராக களமிறக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ், விப்ராஜ் நிகாம் கூட்டணி ராஜஸ்தான் அணியின் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும். அதேவேளையில் கேப்டன் அக்சர் படேல் பேட்டிங், பந்து வீச்சில் பார்முக்கு திரும்புவதில் கவனம் செலுத்தக்கூடும்.
சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடப்பு சீசனில் தடுமாறி வருகிறது. அந்த அணி 6 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 4 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. ஒட்டுமொத்த அணியும் இந்திய வீரர்களின் செயல்திறனை மட்டுமே நம்பியிருப்பது பாதகமாக மாறியுள்ளது. தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஆர்சிபி அணிக்கு எதிராக அரை சதம் அடித்தார். அதை தவிர்த்து அவரிடம் இருந்து தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான செயல் திறன் வெளிப்படவில்லை.
சஞ்சு சாம்சனும் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை, அதே நேரத்தில் இளம் வீரர்களான ரியான் பராக் மற்றும் துருவ் ஜூரெல் ஆகியோரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான சீரான ஆட்டத்தை விளையாடவில்லை. பந்து வீச்சிலும் அந்த அணி தடுமாறி வருகிறது. ஜோப்ரா ஆர்ச்சர் மட்டுமே நம்பிக்கை அளிக்கக்கூடியவராக உள்ளார். சந்தீப் சர்மாவிடம் இருந்து பெரிய அளவிலான செயல் திறன் வெளிப்படவில்லை. வலுவான டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக வெற்றியை வசப்படுத்த வேண்டுமானால் ராஜஸ்தான் அணி அனைத்து துறைகளிலும் மேம்பட்ட செயல் திறனை வெளிப்படுத்த வேண்டும்.