கல்லூரிகளில் பயிலும் திருநர்களுக்கு தனி விடுதிகளை ஏற்படுத்த அரசுக்கு கோரிக்கை | transgender Request to the government to establish separate hostels for transgender in colleges
மதுரை: கல்லூரிகளில் படிக்கும் திருநங்கை, திருநம்பிகளுக்கு தனி விடுதிகள் ஏற்படுத்தவேண்டும் என தேசிய திருநங்கைகள் தின விழாவில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
மதுரையில் தேசிய திருநங்கைகள், திருநம்பிகள் தினம் இன்று கொண்டாடப்பட்டது. எழுத்தாளர் திருநங்கை. பிரியா பாபு தலைமை வகித்தார். ஷாலினி வரவேற்றார். தனியார் அறக்கட்டளையின் நிறுவனர் குரு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மதுரை மாவட்ட சமூகநலத்துறை அதிகாரி திலகா, சட்டப்பணிகள் ஆணைக்குழு வழக்கறிஞர் முத்துக்குமார், அண்ணா கல்லூரி நிறுவனர் அண்ணாதுரை உட்பட சிலர் பங்கேற்றனர். திருநங்கையர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.
விழாவில் திலகா பேசும்போது, ‘திருநங்கைகள் என்றாலே எங்களுக்கு ஒரு பயம் இருந்தது. தற்போது ஆதரவற்ற நிலையில் வீட்டை விட்டு வெளியேற்றிய, புறக்கணிக்கப்பட்ட திருநங்கை, திருநம்பி மாணவ, மாணவிகளாக பல்வேறு கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி பாடப்பிரிவுகளில் படிக்கின்றனர். இது பெருமையாக உள்ளது. சமூக நலத்துறையின் சார்பில் திருநங்கை , திருநம்பிகளுக்கு தேவையான உதவிகளை செய்வோம்’ என்றார்.
பிரியாபாபு பேசுகையில், ‘ வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட திருநங்கை, திருநம்பிகள் மதுரை உட்பட பல்வேறு மாவட்டத்தில் கல்லூரிகளில் படிக்கின்றனர். இவர்களுக்கு கல்வி கட்டணம் தவிர, பிற செலவினங்களுக்கு நிதி தேவை இருக்கிறது. இதற்காக மதுரை, நெல்லை, கோவை, கடலூர் பகுதியில் படிக்கும் திருநங்கை, திருநம்பிகள் என 10 பேருக்கு நிதியுதவி, நம்பிக்கை நட்சத்திரம் என்ற விருதும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சில தனியார் தொண்டு நிறுவனங்கள் செய்துள்ளன.
ஆண், பெண்கள் விடுதியில் தங்கி படிக்க அனுமதி மறுக்கப்படுகிறது. இவர்களுக்கென தமிழக அரசு தனியாக விடுதிகளை அமைக்கவேண்டும். இவர்கள் கஷ்டப்பட்டு படித்தாலும், வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு தேவை” என்றார்.