EBM News Tamil
Leading News Portal in Tamil

ஹாட்ரிக் ரன் அவுட்களால் வெற்றியை தாரைவார்த்த டெல்லி கேப்பிடல்ஸ்: கைகொடுத்த ரோஹித் ஐடியா! | Mumbai Indians beats Delhi capitals IPL 2025


ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது.

திலக் வர்மா 33 பநதுகளில், 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 59 ரன்களும், ரியான் ரிக்கெல்டன் 25 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 41 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 28 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 40 ரன்களும், நமன் திர் 17 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 38 ரன்களும் விளாசினர்.

206 ரன்கள் இலக்குடன் பேட் செய்த டெல்லி அணி 10 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் குவித்து மிக வலுவான நிலையில் இருந்தது. ஆனால் அடுத்த ஓவரில் இருந்து ஆட்டத்தை சிறிது சிறிதாக தங்களது பக்கம் இழுக்க ஆரம்பித்தது மும்பை அணி. அதிரடியாக விளையாடி வந்த அபிஷேக் போரலை (25 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 33 ரன்கள்) இம்பாக்ட் விதியின் கீழ் களமிறங்கிய சீனியர் சுழற்பந்து வீச்சாளரான கரண் சர்மா ஆட்டமிழக்கச் செய்தார்.

இதன் பின்னர் தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டு கடும் அச்சுறுத்தலாக திகழ்ந்த இம்பாக்ட் விதியின் கீழ் களமிறங்கிய கருண் நாயரை (40 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன்) மிட்செல் சாண்ட்னர் போல்டாக்கினார். இதன் பின்னரே மும்பை அணிக்கு நம்பிக்கை அதிகமானது. அக்சர் படேல் 9 ரன்களில் பும்ரா தாழ்வாக லெக் திசையில் வீசிய புல்டாஸ் பந்துக்கு இரையானார். இளம் அதிரடி வீரரான டிரிஸ்டன் ஸ்டப்ஸை ஒரு ரன்னில் பெவிலியனுக்கு திருப்பினார் கரண் சர்மா.

இதையடுத்து கடந்த இரு ஆட்டங்களிலும் தனது அதிரடியால் வெற்றி தேடிக் கொடுத்திருந்த கே.எல்.ராகுலை (13 பந்துகளில், 15 ரன்களை) ஆட்டமிழக்கச் செய்து அசத்தினார் கரண் சர்மா. அப்போது டெல்லி அணி 15.3 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்திருந்தது. அணியின் வெற்றிக்கு 27 பந்துகளில் 46 ரன்களே தேவையாக இருந்தது. களத்தில் விப்ராஜ் நிகாம், அஷுதோஷ் சர்மா நின்ற நிலையில் வெற்றி பெறுவது என்பது எளிதான விஷயமாகவே இருந்தது.

ஏனெனில் இந்த ஜோடி லக்னோ அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் சாத்தியம் இல்லாத சூழ்நிலையில் அதிரடியாக விளையாடி 210 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக துரத்த உதவியிருந்தது. இது ஒருபுறம் இருக்க மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடினமான சூழ்நிலையும் இல்லாததால் விப்ராஜ் நிகாம், அஷுதோஷ் ஜோடி வெற்றிக்கோட்டை எளிதாக கடக்க உதவக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் களசூழ்நிலையோ அதற்கு நேர்மாறாக இருந்தது.

மிட்செல் சாண்ட்னர் வீசிய 18-வது ஓவரின் முதல் இரு பந்துகளிலும் முறையே சிக்ஸர், பவுண்டரி விளாசிய விப்ராஜ் நிகாம் (8 பந்துகளில், 14 ரன்கள்) 4-வது பந்தில் ஸ்டெம்பிங் ஆனார். சாண்ட்னர் ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே வைடாக வீசிய பந்தில் விப்ராஜ் நிகாம் சரியாக சிக்கினார். அப்போது டெல்லி அணியின் ஸ்கோர் 17.4 ஓவர்களில் 180 ஆக இருந்தது. வெற்றிக்கு 14 பந்துகளில் 26 ரன்கள் தேவைப்பட்டது.

தொடர்ந்து பும்ரா வீசிய 19-வது ஓவரின் 4-வது பந்தில் 2 ரன்கள் சேர்க்கும் முயற்சியில் அஷுதோஷ் சர்மா ரன் அவுட் ஆனார். பும்ரா வீசி யார்க்கரை டீப் பேக்வேர்டு பாயின்ட் திசையில் தட்டிவிட்டு அஷுதோஷ் சர்மா 2 ரன்கள் சேர்க்க ஓடினார். ஆனால் வில் ஜேக்ஸ், ரிக்கெல்டன் ஆகியோரது கூட்டணியால் ரன் அவுட் செய்யப்பட்டார். முன்னதாக இந்த ஓவரின் 2-வது மற்றும் 3-வது பந்தை அஷுதோஷ் பவுண்டரிக்கு விரட்டியிருந்தார்.

இதனால் 9 பந்துகளில் 15 ரன்களே வெற்றிக்கு தேவையாக இருந்தது. ஆனால் அஷுதோஷ் சர்மா அவசரப்பட்டு செயல்பட்டு தனது விக்கெட்டை ரன் அவுட்டில் பறிகொடுத்தார். அடுத்த பந்தில் இதே பாணியில் குல்தீப் யாதவ் 2 ரன்கள் சேர்க்க முயன்று ரன் அவுட் ஆனார்.

கைவம் ஒரு விக்கெட் இருக்க மோஹித் சர்மா, பும்ரா மிடில் ஸ்டெம்புக்கு நேராக வீசிய கடைசி பந்தை மிட் விக்கெட் திசையில் தட்டிவிட்டு ஒரு ரன் எடுக்க ஓடினார். ஆனால் நொடிப்பொழுதில் பந்தை சேகரித்த மிட்செல் சாண்ட்னர் துல்லியமான த்ரோவால் ஸ்டெம்புகளை தகர்க்க 19 ஓவர்களில் 193 ரன்கள் எடுத்து வெற்றியை பறிகொடுத்தது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. வெற்றி கைகளில் இருந்த முக்கியமான கட்டத்தில் டெல்லி அணி 3 விக்கெட்களை ரன் அவுட்கள் வாயிலாக தாரைவார்த்து வெற்றியை மும்பை அணிக்கு வாரிக்கொடுத்தது.

மோஹித் சர்மா கடைசி பந்தில் ரன் சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏதும் இல்லை. மறுமுனையில் இருந்த மிட்செல் ஸ்டார்க் கடைசி ஓவரை எதிர்கொண்டிருந்தால் ஒருவேளை டெல்லி அணி வெற்றிக் கோட்டை கடக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அதற்கான வாய்ப்பை மும்பை அணி கொடுக்கவில்லை. இதன் விளைவாக நடப்பு தொடரில் தோல்விகளை சந்திக்காமல் வலம் வந்த டெல்லி அணியின் தொடர்ச்சியான 4 வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மும்பை அணியின் வெற்றியில் கரண் சர்மா, மிட்செல் சாண்ட்னர் ஆகியோரது சுழற்பந்து வீச்சும், கடைசியாக நிகழ்த்தப்பட்ட 3 ரன் அவுட்களும் முக்கிய பங்கு வகித்தன. மேலும் டெல்லி அணியின் பேட்டிங்கின் போது பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் 13-வது ஓவரில் புதிய பந்து பயன்படுத்தப்பட்டது. இது மும்பை அணியின் பந்து வீச்சாளர்களுக்கு நன்கு கைகொடுத்தது.

மேலும் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவின் ஆலோசனையின்படியே இம்பாக்ட் பிளேயர் விதியின் கீழ் கரண் சர்மாவை அணிக்குள் கொண்டு வந்திருந்தது மும்பை அணி நிர்வாகம். கரண் சர்மா முக்கியமான கட்டங்களில் ஒவ்வொரு முறை விக்கெட் வீழ்த்திய போதும் வெளியே இருந்தபடி ரோஹித் சர்மா கொண்டாடிய விதம் அனைவரையும் கவர்ந்திருந்தது.