EBM News Tamil
Leading News Portal in Tamil

நடுவரிசை பேட்ஸ்மேன்களின் மோசமான ஷாட்களால் தோல்வி: டெல்லி கேப்டன் அக்சர் படேல் வேதனை | Axar Patel blames middle order after MI ends DC IPL 2025 winning streak


புதுடெல்லி: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில்மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. 206 ரன்கள் இலக்கை விரட்டிய டெல்லி அணி 19 ஓவர்களில் 193 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டெல்லி அணிக்கு நடப்பு சீசனில் இது முதல் தோல்வியாக அமைந்தது.

தோல்வி குறித்து டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல் கூறும்போது, “பேட்டிங்கின் போது நடுவரிசையில் சில மோசமான ஷாட்களால் எளிதான வகையில் விக்கெட்களை பறிகொடுத்தோம். எனினும் இந்த ஆட்டத்தின் முடிவு குறித்துஅதிகம் கவலைப்படமாட்டோம். ஒரு ஓவர் மீதமிருக்கையில் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினோம். கீழ் வரிசை பேட்ஸ்மேன்கள் வந்து சேஸிங்கில் காப்பாற்றுவார்கள் என்பது எப்போதும் நடைபெறாது.

தவறான ஷாட்களை மேற்கொள்ளும் சில நாட்கள் அமையும். ஆனால் அதுகுறித்து அதிகம் சிந்திப்பதில் எந்தவித அர்த்தமும் இல்லை. 206 ரன்கள் இலக்கு என்பது சிறப்பானது. ஏனெனில் ஆடுகளம் அருமையாக இருந்தது. பனிப்பொழிவும் இருந்தது. பீல்டிங்கில் சில கேட்ச்களை சிறந்த முறையில் எடுத்திருந்தால் மும்பை அணியை குறைந்த ரன்களில் கட்டுப்படுத்தியிருக்கலாம். இந்த ஆட்டத்தை நாங்கள் மறக்க வேண்டும். இவ்வாறு அக்சர் படேல் கூறினார்.