யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் தேவை: பிரதமர் மோடியிடம் சனத் ஜெயசூர்யா கோரிக்கை | Jaffna needs international cricket stadium Sanath Jayasuriya requests pm Modi
 
புதுடெல்லி: யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க இந்தியா உதவ வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யா கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த வாரம் பிரதமர் மோடி, இலங்கைக்கு சென்றிருந்தார். அப்போது பிரதமர் மோடியை, 1996-ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம்பிடித்திருந்த இலங்கை வீரர்கள் சந்தித்துப் பேசினர்.
அப்போது அவர்களைப் பாராட்டிப் பேசிய பிரதமர் மோடி, இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்திலும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். பிரதமர் மோடியைச் சந்தித்தபோது, யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க இந்தியா உதவ வேண்டும் என்று இலங்கை முன்னாள் கேப்டனும், இலங்கை அணியின் பயிற்சியாளருமான சனத் ஜெயசூர்யா கோரிக்கை விடுத்திருந்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் சனத் ஜெயசூர்யா கூறியதாவது: பொருளாதார பிரச்சினையில் சிக்கி இருக்கும் இலங்கைக்கு ஏராளமான உதவிகளை இந்தியா செய்துள்ளது. அதற்காக எனது நன்றி.
யாழ்ப்பாணத்திலிருந்து ஏராளமான திறமையான கிரிக்கெட் வீரர்கள் வருகின்றனர். ஆனால் அங்கு சர்வதேச கிரிக்கெட் மைதானம் இல்லை. நாங்கள் அங்கு மாகாண அளவிலும், மாவட்ட அளவிலும் பயிற்சியாளர்களை நியமித்து திறமையான வீரர்களை கண்டறிந்து வருகிறோம்.
அவர்களுக்கு உதவும் பொருட்டு யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க இந்தியா உதவவேண்டும். இதற்காக பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்தேன். இதுதொடர்பாக அவர் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.