அதிர வைத்த அபிஷேக் சர்மா: 8 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் வெற்றி | SRH vs PBKS | Sunrisers Hyderabad vs Punjab Kings LIVE Scorecard, IPL 2025
 
நடப்பு ஐபிஎல் சீசனின் 27-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அபார வெற்றி பெற்றது.
ஹைதராபாத் நகரில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட் செய்ய முடிவு செய்தது. அந்த முடிவு சரி என்பதை நிரூபிக்கும் வகையில் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் செயல்பட்டனர். முதல் விக்கெட்டுக்கு 66 ரன்கள் சேர்த்தனர் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள். பிரியான்ஷ் ஆர்யா 13 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிரப்சிம்ரன் சிங், 23 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார்.
முதல் 6 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்தது பஞ்சாப். தொடக்க ஆட்டக்காரர்கள் ஆட்டமிழந்ததும் ஆட்டத்தில் அதிரடி காட்டினார் ஸ்ரேயாஸ் ஐயர். நேஹல் வதேரா 22 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஷஷாங்க் மற்றும் மேக்ஸ்வெல் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர்.
ஸ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார். 6 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்களை அவர் விளாசினார். ஸ்டாய்னிஸ் 11 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். 4 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார். மொத்தம் 16 சிக்ஸர்களை பஞ்சாப் அணி விளாசி இருந்தது. 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்தது.
246 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணியின் டிராவிஸ் ஹெட் 37 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து அசத்தினார். மறுமுனையில் ஆடிய அபிஷேக் சர்மாதான் இந்த போட்டியின் ஆட்டநாயகன். 55 பந்துகளில் 10 சிக்ஸர் 14 பவுண்டரி என 141 குவித்து மைதானத்தை அதிரவிட்டார். அடுத்து இறங்கிய கிளாஸன் 21 ரன்களும், இஷான் கிஷன் 9 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டி வெற்றியை பதிவு செய்தது ஹைதராபாத் அணி.
சிஎஸ்கே அணிக்கு பின்னடைவு: இன்றைய போட்டியின் வெற்றி மூலம் புள்ளிப் பட்டியலில் 8வது இடத்துக்கு முன்னேறியுள்ளது ஹைதராபாத் அணி. இதனால் 9வது இடத்தில் இருந்த சிஎஸ்கே அணி 10வது இடத்துக்கு சரிந்துள்ளது.