EBM News Tamil
Leading News Portal in Tamil

சிஎஸ்கே தோல்வியும் தெறிக்கும் மீம்களும் – ‘மரம் நடுவோம்… இயற்கையை பாதுகாப்போம்’ | plant trees protect nature CSK defeat fans netizens viral memes ipl 2025


சென்னை: கேப்டன் தோனியின் வருகை சிஎஸ்கே அணியை வெற்றி பாதைக்கு திரும்ப செய்யும் என்ற எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் அதிகரித்திருந்தது. இருப்பினும் நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 5-வது தொடர் தோல்விக்கு பிறகு அது தவிடு பொடியானது. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்வியை விமர்சிக்கும் வகையில் ரசிகர்கள், நெட்டிசன்கள் என பலரும் சமூக வலைதளத்தில் மீம்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.

நடப்பு சீசனில் 6 போட்டிகளில் விளையாடி உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. அதற்கடுத்த 5 போட்டிகளில் தோல்வியை தழுவியது. சென்னை அணி தோல்வி பெறுவதை காட்டிலும் வெற்றி பெறுவதற்கான முனைப்பு கூட வெளிக்காட்டாதது தான் விமர்சனத்துக்கு காரணமாக அமைந்துள்ளது. புள்ளிப்பட்டியலில் இப்போதைக்கு 9-வது இடத்தில் உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக் கோட்டையான சேப்பாக்கம் மைதானத்தில் தொடர்ச்சியாக மூன்று தோல்விகளை அந்த அணி தழுவி உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இப்படி நடப்பது இதுவே முதல்முறை. அதுதான் ரசிகர்களை கொதிப்படைய செய்துள்ளது.

கடந்த சில சீசன்களாக பேட்ஸ்மேன்கள் ரன் ஏதும் எடுக்காத வகையில் பவுலர்கள் டாட் பந்துகள் வீசினால் அதற்கு மரம் நடும் சூழல் பாதுகாப்பு சார்ந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் 6 போட்டிகளில் 245 பந்துகள் ரன் ஏதும் எடுக்காமல் டாட் பந்துகளாக ஆடியுள்ளது சிஎஸ்கே. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உடன் மட்டும் 61 டாட் பந்துகள் ஆடியுள்ளது. இதே போட்டியில் 61 பந்துகளில் ஆட்டத்தை முடித்து, வெற்றி பெற்றது கொல்கத்தா.

இதை அறிந்து விரக்தியடைந்த ரசிகர்கள், நெட்டிசன்கள் தங்களது மீம்களில் குறிப்பிட்டுள்ளதாவது: ‘மரம் நடுவோம்… இயற்கையை பாதுகாப்போம்’, ‘சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் லோகோவில் இடம்பெற்றுள்ள சிங்கம் அந்த அணியின் பேட்ஸ்மேன்களால் காட்டில் வாழ திரும்ப அனுப்பப்பட்டு விட்டது’, ‘இதனால் தான் நான் சிஎஸ்கே அணியை நேசிக்கிறேன். அவர்களுக்கு சூழல் மீது அவ்வளவு அக்கறை’, ‘பூமித் தாயை காக்க சிஎஸ்கே உறுதி ஏற்றுள்ளது’, ‘மீண்டும் ஒருமுறை ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்கு பதிலாக மரம் நடுவதில் பங்காற்றியுள்ளது சிஎஸ்கே’ போன்ற மீம்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகின்றன.

‘முதல் பந்தை மட்டும் அல்ல மொத்த சீசனையும் சாமிக்கு விட்டுள்ளது சிஎஸ்கே’, ‘சிஎஸ்கே அணியால் இரண்டாவதாக பேட் செய்ய முடியாது. முதலாவதாக பேட் செய்வது அதனினும் மோசமானது’ போன்ற மீம்களும் வலம் வருகின்றன. இதற்கெல்லாம் பதில் தரும் வகையில் வரும் போட்டிகளில் சிஎஸ்கே அணியின் செயல்பாடு இருக்க வேண்டுமென்பது மெய்யான சிஎஸ்கே அன்பர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

— Sarcasm (@sarcastic_us) April 11, 2025