பஞ்சாப் கிங்ஸுடன் இன்று மோதல்: தொடர் தோல்விகளில் இருந்து மீளுமா ஹைதராபாத்? | Clash with Punjab Kings today Will Hyderabad recover from losing streak ipl 2025
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
கடந்த சீசனில் 2-வது இடம் பிடித்திருந்த ஹைதராபாத் அணியானது நடப்பு சீசனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக வெற்றியுடன் தொடங்கியிருந்தது. அந்த ஆட்டத்தில் 286 ரன்கள் வேட்டையாடிய ஹைதராபாத் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. பேட்டிங்கில் தாக்குல் ஆட்டம் மேற்கொள்ளும் அந்த அணி ஏதேனும் ஒரு ஆட்டத்தில் 300 ரன்களை எட்டி சாதனை படைக்கக்கூடும் என கூறப்பட்டது. ஆனால் இந்த அதிரடி ஆட்டமே அடுத்தடுத்த ஆட்டங்களில் அந்த அணிக்கு பாதகமாக மாறியது.
தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ள ஹைதராபாத் அணி 2 புள்ளிகளுடன் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. கடைசியாக விளையாடி 3 ஆட்டங்களில் ஹைதராபாத் அணி முறைய 163, 120 மற்றும் 152 ரன்களே எடுத்தது. மோசமான தோல்விகளால் அந்த அணியின் நிகர ரன் ரேட் -1.629 ஆக உள்ளது. அதிர பேட்ஸ்மேன்களான டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசன், நித்திஸ் குமார் ரெட்டி ஆகியோர் ஆட்டத்தின் சூழ்நிலைக்கு ஏற்றபடி விளையாடாமல் மட்டையை சுழற்றி ஆட்டமிழப்பது பலவீனமாகி உள்ளது.
டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா ஜோடி கடந்த சீசனில் தங்களது அதிரடியால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தினர். ஆனால் இந்த சீசனில் அவர்கள் தடுமாறி வருகிறார்கள். 5 ஆட்டங்களிலும் டிராவிஸ் ஹெட் முறையே 67, 47, 22, 4, மற்றும் 8 ரன்கள் சேர்த்தார். அதேவேளையில் அபிஷேக் சர்மா ஒட்டுமொத்தமா 5 ஆட்டங்களையும் சேர்த்து 51 ரன்களே எடுத்துள்ளார். இதில் அதிகபட்ச ஸ்கோர் 24 ஆகும். இஷான் கிஷன் தொடக்க ஆட்டத்தில் சதம் அடித்து மிரட்டினார். ஆனால் அடுத்த 4 ஆட்டங்களிலும் அவர் கூட்டாக சேர்த்த ரன்கள் 21 மட்டுமே.
நடுவரிசையில் ஹென்ரிச் கிளாசன், பின் வரிசையில் நித்திஷ் குமார் ரெட்டி ஆகியோரும் தடுமாறி வருகிறார்கள். பேட்டிங் ஒருபுறம் பலவீனமாக காணப்படும் நிலையில் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சும் இதுவரை எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. பாட் கம்மின்ஸ், முகமது ஷமி, ஹர்ஷால் படேல், சிமர்ஜீத் சிங் ஆகியோரால் தொடக்க மற்றும் நடுஓவர்களில் விக்கெட்களை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுக்க முடியவில்லை. ஆடம் ஸாம்பாவின் சுழலும் கைகொடுக்கவில்லை.
இன்றைய போட்டி உட்பட ஹைதராபாத் அணிக்கு 9 ஆட்டங்கள் எஞ்சியுள்ளது. இதில் கணிசமான வெற்றிகளை குவித்தால் மட்டுமே அந்த அணியால் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பில் நீடிக்க முடியும். இதனால் அந்த அணி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டுமானால் பேட்டிங்கில் முழுமையாக தாக்குதல் ஆட்டத்தை மேற்கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தாமல் களத்தின் சூழ்நிலைக்கு தகுந்தவாறு செயல்பட வேண்டியது அவசியம்.
ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 4 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. கடைசியாக சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்த ஆட்டத்தில் இளம் தொடக்க வீரரான பிரியன்ஷ் ஆர்யா சதம் விளாசியிருந்தார். அதேவேளையில் பின்வரிசையில் ஷஷாங் சிங் இறுதிக்கட்ட ஓவர்களில் மட்டையை சுற்றி அரை சதம் கடந்திருந்தார். இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த திறன் வெளிப்படக்கூடும்.
கடந்த இரு ஆட்டங்களிலும் விரைவாக ஆட்டமிழந்த ஸ்ரேயஸ் ஐயர் நிலைத்து நின்று விளையாடுவதில் கவனம் செலுத்தக்கூடும். இதேபோன்று மார்கஸ் ஸ்டாயினிஸ், நேஹல் வதேரா, கிளென் மேக்ஸ்வெல் ஆகியோரும் பார்முக்கு திரும்புவதில் முனைப்பு காட்டக்கூடும்.