தடுமாறிய சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள்: 103 ரன்களில் சுருட்டிய கொல்கத்தா | CSK vs KKR | csk batters fails to score runs in chepauk versus kkr ipl 2025
சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனின் 25-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி வீரர்கள் ரன் சேர்க்க தடுமாறினர். 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது அந்த அணி.
சென்னை – சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச முடிவு செய்தது. கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா இன்னிங்ஸை ஓபன் செய்தனர். காயம் காரணமாக ருதுராஜ் கெய்க்வாட் இந்த சீசனில் இருந்து விலகி உள்ளார். அதனால் அணியை தோனி வழிநடத்துகிறார். சிறப்பான தொடக்கத்தை சிஎஸ்கே ஓப்பனர்கள் கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு 4-வது ஓவரில் தவிடு பொடியானது. கான்வே, 12 ரன்கள் எடுத்து எல்பிடபிள்யூ முறையில் மொயின் அலி வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் நான்கே ரன்களில் ரச்சின் வெளியேறினார். அவரை ராணா அவுட் செய்தார்.
முதல் 6 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு வெறும் 31 ரன்களை மட்டுமே எடுத்தது சிஎஸ்கே. விஜய் சங்கருக்கு இரண்டு கேட்ச் வாய்ப்புகளை கொல்கத்தா வீரர்கள் நழுவவிட்டனர். அவர் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். வருண் சக்கரவர்த்தி அவரது விக்கெட்டை தூக்கினார். ரன் சேர்க்க தடுமாறிய ராகுல் திரிபாதி 16 ரன்களில் வெளியேறினார். அவரை போல்ட் ஆக்கினார் நரேன்.
தொடர்ந்து அஸ்வின் (1), ஜடேஜா (0), இம்பேக்ட் வீரராக வந்த தீபக் ஹூடா (0), தோனி (1), நூர் அகமது (1) ரன்னில் ஆட்டமிழந்தனர். டி20 ஆட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட் பாணியில் சிஎஸ்கே ஆடியது போலவே இந்த இன்னிங்ஸ் இருந்தது. அணியின் காம்பினேஷன் சரிவர அமையாத காரணத்தால் இந்த சரிவை சிஎஸ்கே எதிர்கொண்டுள்ளது என கணிக்க முடிகிறது. இந்த ஆட்டத்தில் தொடர்ந்து 64 பந்துகள் பவுண்டரி பதிவு செய்யாமல் ஆடியது சிஎஸ்கே.
இந்த ஆட்டத்தில் தீபக் ஹூடாவை இம்பேக்ட் வீரராக விளையாட வைத்தது சிஎஸ்கே. மற்ற பேட்ஸ்மேன்கள் ஓரளவுக்கு ரன் சேர்த்திருந்தால் ஹூடாவுக்கு பதிலாக இரண்டாவது இன்னிங்ஸில் பதிரனா பந்து வீசி இருப்பார். விரைவு கதியில் விக்கெட்டை சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் இழந்த காரணத்தால் ஹூடா ஆடினார். அவருக்கு மாற்றாக வெளிநாட்டு வீரர் ஜேமி ஓவர்டன்னை ஆடியிருக்கலாம். ஆல்ரவுண்டரான அவர் வேகப்பந்து வீசுவார். ஹூடாவை இரண்டாவது இன்னிங்ஸில் சுழற்பந்து வீச சிஎஸ்கே பயன்படுத்தும் ஆப்ஷன் மட்டுமே இப்போது உள்ளது.
சேப்பாக்கத்தில் டிஃபென்ட் செய்யப்பட்ட குறைந்தபட்ச பட்ச ரன்கள் 126 என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 8 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் மட்டுமே சிஎஸ்கே எடுத்தது. ஷிவம் துபே 29 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ். இந்த ஆட்டத்தில் கொல்கத்தா வெற்றி பெற 104 ரன்கள் தேவை. இந்த சீசனில் சேப்பாக்கத்தில் நடைபெற்ற 3 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த அணி இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.