‘உலகில் இனி எந்த டி20 லீகுகளிலும் ஆட மாட்டேன்’ – ஹாரி புரூக் திட்டவட்டம் | I will never play in any T20 league in world says england skipper Harry Brook
இங்கிலாந்து வெள்ளைப்பந்து அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டதையடுத்து உலகில் இனி எந்தவொரு தனியார் டி20 லீக் தொடர்களிலும் ஆடப்போவதில்லை, இங்கிலாந்து தான் என் அணி என்று ஹாரி புரூக் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2025-ம் ஆண்டு சீசனுக்கான ஏலத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஹாரி புரூக்கை ரூ.6.25 கோடிக்கு ஏலம் எடுத்தது. இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் டிராபியில் வெளியேறியதைத் தொடர்ந்து அனைத்து தனியார் டி20 போட்டிகளிலிருந்தும் விலகப்போவதாக அவர் முடிவெடுத்தார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்தும் ஹாரி புரூக் தன் பாட்டியின் இறப்பு காரணமாக விலகினார்.
மேலும், புதிய ஐபிஎல் விதிகளின்படி இவர் அடிக்கடி விலகுவதால் 2027 வரை ஐபிஎல் தொடரில் ஆட முடியாது. இங்கிலாந்து வீரர்களில் கெவின் பீட்டர்சன் தவிர ஐபிஎல் தொடர்களில் பெரிய அளவில் சாதித்தவர்களாக எந்தவொரு வீரரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது என்பது ஒருபுறம். அவருக்கு அடுத்த இடத்தில் ஜாஸ் பட்லர் இருக்கிறார்.
இந்நிலையில், பிபிசிக்கு அளித்த பேட்டியில் ஹாரி புரூக் கூறியதாவது: “முன்னோக்கிப் பார்க்கையில் இங்கிலாந்து அணி மட்டும்தான் என் கண்களுக்குத் தெரிகிறது. இப்போதைக்கு தனியார் டி20 லீகுகள் என் திட்டத்தில் விலகியே இருக்கின்றன.
இங்கிலாந்துக்காக ஆடுவதில் தான் எனக்கு அதிக மகிழ்ச்சி இருக்கிறது. அனைத்தையும் விட இங்கிலாந்து அணிக்கு ஆடுவதுதான் எனக்கு முக்கியமானது. ஆகவே கொஞ்சம் பண வரவை இழந்தால் பரவாயில்லை என்றே தோன்றுகிறது. எந்த நாளிலும் இங்கிலாந்துக்கு ஆடுவதையே விரும்புகிறேன்.
இங்கிலாந்துக்காக ஒவ்வொரு தொடரிலும் எதையும் தவிர்க்காமல் ஆட முடிவெடுத்துள்ளேன். ஆங்காங்கே சில இடைவேளைகள் இருக்கலாமே தவிர இங்கிலாந்தைத் தவிர்த்து டி20 லீகுகளில் ஆடுவது என்பது இனி கிடையாது என்றே நினைக்கிறேன். ஒவ்வொரு தொடருக்கும் இடையில் ஒரு வாரம் இடைவெளி தேவை, அது எனக்குக் கிடைக்கும் என்றே கருதுகிறேன்.” என்றார் ஹாரி புரூக்.
இங்கிலாந்து அணி, ஜூன் மாதத்தில் உள்நாட்டில் இந்திய அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளிலும் பிறகு ஆண்டு இறுதியில் மிக மிக சோதனை தரும் ஆஷஸ் தொடர் என்னும் சவால்களை எதிர்கொள்ள இருக்கிறது.