ஒருநாள் போட்டி, டி 20-க்கு ஹாரி புரூக் கேப்டனாக நியமனம் | Harry Brook named England white-ball captain
இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டி, டி 20 அணியின் கேப்டனாக ஹாரி புரூக் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் மோசமாக செயல்பட்டதை தொடர்ந்து இங்கிலாந்து அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஜாஸ் பட்லர் விலகினார். இந்நிலையில் இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டி, டி 20 அணியின் கேப்டனாக ஹாரி புரூக் நியமிக்கப்பட்டுள்ளார்.
26 வயதான ஹாரி புரூக் 2022-ம் ஆண்டு ஜனவரியில் குறுகிய வடிவிலான போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக அறிமுகமானார். கடந்த ஒரு வருடமாக அவர், ஒருநாள் போட்டி, டி 20 ஆட்டங்களில் துணை கேப்டனாக பணியாற்றி வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் ஜாஸ் பட்லர் காயம் காரணமாக விளையாடாத நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் இங்கிலாந்து அணியை ஹாரி புரூக் வழிநடத்தியிருந்தார்.
இதுவரை 26 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ள ஹாரி புரூக், 34 சராசரியுடன் 816 ரன்கள் சேர்த்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 110 ஆக உள்ளது. அதேவேளையில் டி 20-ல் 44 ஆட்டங்களில் விளையாடி 798 ரன்கள் எடுத்துள்ளார். 2022-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியிலும் ஹாரி புரூக் இடம் பெற்றிருந்தார்.