EBM News Tamil
Leading News Portal in Tamil

விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதா சிஎஸ்கே? – அஸ்வின் யூடியூப் சேனலுக்கு வந்த சோதனை! | does CSK beyond criticism Ashwin s YouTube channel comes under attack explained


ஒரு அணியை விமர்சனம் செய்வது என்பது இயல்பு. சமூக ஊடகங்களில் சிஎஸ்கேவைக் கலாய்த்து எத்தனையோ மீம்ஸ்கள் மழையாய்ப் பொழிந்து கொண்டிருக்கின்றன. ஆனால், கிரிக்கெட் வீரர் அஸ்வின், தனது யூடியூப் சேனலில் ஒரு நிபுணர் வந்து சிஎஸ்கே செலெக்‌ஷனில் தவறு என்று பேசிய பிறகே சமூக ஊடகம் அஸ்வினின் யூடியூப் சேனல் மீது விமர்சனங்களை அள்ளித் தெளித்ததையடுத்து இனி சிஎஸ்கே போட்டி குறித்த முன்னோட்டம், ரிவ்யூ என எதையும் செய்யப்போவதில்லை என்று அந்தச் சேனல் முடிவெடுத்துள்ளது.

விமர்சனம் என்பது ஜனநாயக அமைப்பின் உயிர் மூச்சாகும். ஆனால், நம்முடையப் பண்பாட்டில் நாயக வழிபாடும் தேசிய, பிரதேச வெறியும் தாண்டவமாடும் சூழ்நிலையில் விமர்சனத்தின் தேவை உயிர் மூச்சை விடவும் மேலானது. ஆனால், இங்கு ஒரு பயங்கரம் நிகழ்ந்து வருகிறது. விமர்சகர்களின் வாய் அடைக்கப்பட்டு வருகிறது என்பதற்கு இது ஒரு அத்தாட்சி. அதுவும் அங்கு வந்து பேசும் கருத்தாளர்களின் கருத்துக்கள் ஏதோ அஸ்வினின் சொந்த கருத்துக்கள் போல் எடுத்துக் கொள்ளப்பட்டு விமர்சிக்கப்படும் அபத்தங்களும் நிகழ்ந்தன.

நடந்தது என்ன? – கடந்த வாரம் கிரிக்கெட் தரவுப் பகுப்பாய்வாளர் (டேட்டா அனலிஸ்ட்) பிரசன்னா அகோரம், அஸ்வின் யூடியூப் சேனலில் அந்த அணியின் வீரர்கள் தேர்வை விமர்சித்தார். அதாவது, ஜடேஜா, அஸ்வின் இருக்கும் போது எதற்கு நூர் அகமதுவைத் தேர்வு செய்ய வேண்டும். 3-வது ஸ்பின்னருக்குப் பதில் ஒரு பேட்டரைக் கூடுதலாக அணியில் எடுக்கலாமே என்று நியாயமான, மிகச்சரியான ஒரு கருத்தை அவர் கூறினார்.

ஆனால், நூர் அகமது இப்போது பர்ப்பிள் கேப்புக்குச் சொந்தக்காரர். அதனால் சோஷியல் மீடியா இவரது விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் அஸ்வின் யூடியூப் சேனலில் பேசியதால் அஸ்வின் அணியில் தேவையில்லை என்று கூற முடியாது. எனவே நூர் அகமதுவை அவர் தேவையில்லை என்று கூறியுள்ளார். சரி, ஒருவரை அழைத்து அவரிடம் விஷயத்தைக் கேட்டால் அவர் தன் கருத்தைத் தெரிவிப்பார், இதில் என்ன தவறு காண முடியும்? அவர் கருத்தை அவர் கூற உரிமை உண்டு.

இந்நிலையில் அஸ்வின் யூடியூப் சேனலின் அட்மின் தரப்பிலிருந்து வெளியிடப்பட்ட குறிப்பில், “கடந்த வாரம் நிகழ்ந்த விவாதங்களைக் கணக்கில் கொண்டு கருத்துகள் எப்படி திரிக்கப்படுகின்றன என்பதை கவனத்தில் கொண்டு, சிஎஸ்கே போட்டிகள் குறித்த முன்னோட்டம், மதிப்பாய்வு, அலசல் ஆகியவற்றைக் கைவிட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

எங்கள் சேனலில் வரும் கருத்துகளின் பன்முகத் தன்மையை மதிப்பு மிக்கதாகக் கருதுகிறோம். இந்த சேனலின் ஓர்மையையும், நோக்கத்தையும் இதன் மூலம் காக்க விரும்புகிறோம். நாங்கள் அழைக்கும் கருத்தாளர்களின் கருத்துகள் அஸ்வினின் கருத்துகள் கிடையாது” என்று தெரிவித்துள்ளது.