‘வந்தார்… வென்றார்’ – வாஷி வருகையை அடுத்து சுந்தர் பிச்சைக்கு குஜராத் டைட்டன்ஸ் ரிப்ளை | Gujarat Titans reply to google ceo Sundar Pichai after washington sundar knock
சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 29 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து அசத்தினார் குஜராத் டைட்டன்ஸ் வீரர் வாஷிங்டன் சுந்தர். இந்நிலையில், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை குஜராத் அணியில் வாஷிங்டன் சுந்தரை தேர்வு செய்யாதது குறித்து சமூக வலைதள பதிவு மூலம் கேட்டிருந்தார். அதற்கு தற்போது குஜராத் அணி பதில் தந்துள்ளது.
சுந்தர் பிச்சையின் ட்வீட்டை மேற்கோள் காட்டி “சுந்தர் வந்தார்… வென்றார்” என பதிவிட்டுள்ளது குராஜாத் அணி. ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தருக்கு ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைப்பது மிகவும் அரிதான வாய்ப்பாக உள்ளது. நடப்பு சீசனில் முதல் முறையாக விளையாடும் வாய்ப்பை ஹைதராபாத் அணிக்கு எதிராக வாஷிங்டன் சுந்தர் பெற்றிருந்தார்.
கடந்த 2017 முதல் 61 ஆட்டங்களில் வாஷிங்டன் சுந்தர் விளையாடி உள்ளார். ரைஸிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் (1 சீசன்), ஆர்சிபி (2018 – 2021), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (2022 – 2024), குஜராத் டைட்டன்ஸ் (2025) என நான்கு அணிகளுக்காக அவர் விளையாடி உள்ளார். அதிகபட்சமாக ஆர்சிபி அணிக்காக 31 ஆட்டங்களில் விளையாடி உள்ளார். ஒரு சீசனில் அதிகபட்சமாக 15 ஆட்டங்களில் விளையாடி உள்ளார். அது கடந்த 2020-ம் ஆண்டு சீசனில் நடந்தது.
சுந்தர் பிச்சை ட்வீட்: புஷ்கர் எனும் கிரிக்கெட் ரசிகர் தன் எக்ஸ் தளத்தில் இந்திய அணியின் 15 வீரர்களில் ஒருவராக இடம்பெற்ற வாஷிங்டன் சுந்தர் ஐபிஎல் லெவனில் இடம்பெறுவதற்கு தகுதியற்றவராகி விடுகிறாரா? என்ற ரீதியில் கேள்வி எழுப்பியிருந்தார்.
அவரது கேள்வியை பலரும் ஆமோதித்தும் ஐபிஎல் கிரிக்கெட்டின் விசித்திர இம்பேக்ட் வீரர் விதியினால் இப்படி ஆகிவிடுகிறது என்று சிலரும் ஆதங்கத்தையும் வருத்தத்தையும் பகிர்ந்திருந்தனர்.
வாஷிங்டன் சுந்தரை அணியில் எடுக்காதது பற்றிய புஷ்கரின் எக்ஸ் தளப் பதிவில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பதில் அளித்திருந்தார். “எனக்கும் கூட ஆச்சரியமாகவே இருக்கிறது” என்று அவர் குறிப்பிட்டார். இந்த நிலையில் தான் அவருக்கு குஜராத் டைட்டன்ஸ் பதில் அளித்துள்ளது.
Sundar came. Sundar conquered. https://t.co/CjOOtEhBBV