“நான் இந்திய அணியில் இல்லாததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” – முகமது சிராஜ் | could not accept that I was not in team India says Siraj ipl 2025
ஹைதராபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் 19-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 17 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பந்து வீச்சாளர் முகமது சிராஜ். அதன் மூலம் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார். ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுதான் அவரது சிறந்த பவுலிங் பர்ஃபாமென்ஸ்.
இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பாக பல சோதனைகளை சிராஜ் எதிர்கொண்டார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதேபோல ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அவரை தக்கவைக்க தவறியது போன்றவற்றை சொல்லலாம். இது குறித்து அவரும் வெளிப்படையாக பேசி இருந்தார். தன்னால் சிறந்த முறையில் பந்து வீச முடியும் என்ற நம்பிக்கையை தனது பேச்சில் வெளிப்படுத்தினார். இப்போது அதை களத்தில் செய்து கொண்டுள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 7 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது குஜராத் டைட்டன்ஸ். ஆட்ட நாயகன் விருதை வென்ற சிராஜ் கூறியது: “எப்போதுமே சொந்த ஊரில் விளையாடுவது என்பது ஸ்பெஷல் ஆனது. இந்த ஆட்டத்தை பார்க்க எனது குடும்பத்தினர் வந்திருந்தனர். அது எனக்கு ஊக்கம் தந்தது. நான் ஆர்சிபி அணிக்காக 7 ஆண்டுகள் விளையாடி உள்ளேன். எனது பந்து வீச்சில் மிகவும் கடுமையாக பயிற்சி செய்தேன். அது எனக்கு நல்ல பலனை தந்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் நான் இல்லாததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால், என்னால் முடியும் என்ற நம்பிக்கையுடன் பயிற்சி செய்தேன். எங்கு தவறு செய்கிறேன் என்பதை அறிந்து, சரி செய்தேன். எனது பந்து வீச்சை என்ஜாய் செய்கிறேன். ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணியில் தொடர்ந்து விளையாடும் போது ஆழ்மனதில் ஒரு சந்தேகம் எழும். அணியில் நீக்கப்படுவோமோ என்பது தான் அது. இருப்பினும் அது எனக்கு நடந்த போது உற்சாகம் கொடுத்துக் கொண்டேன். ஐபிஎல் சீசனுக்காக காத்திருந்தேன். பந்தை உள்ளே, வெளியே என வீசும்போது வித்தியாச உள்ளுணர்வை பெற முடியும்” என்றார். இப்போது 4 ஆட்டங்களில் விளையாடி 9 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார் சிராஜ்.