‘எங்களால் முடியவில்லை…’ – சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் வேதனை | CSK captain Ruturaj anguish about not crossing winning line ipl 2025
சென்னை: டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் என அடுத்தடுத்து மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது சிஎஸ்கே.
இந்நிலையில், தோல்வி குறித்து சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறும்போது, “இந்த ஆட்டம் மட்டும் இல்லை, கடந்த 3 ஆட்டங்களுமே எங்கள் வழியில் அமையவில்லை. 3 துறைகளிலும் எங்களால் முடிந்தவரை சிறப்பாக செயல்பட முயன்றோம்.
பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பவர்பிளேவில் நாங்கள் செயல்படும் விதம் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. இது 2-வது ஆட்டத்தில் இருந்தே தொடர்கிறது. நாங்கள் சிறப்பாக விளையாட முயற்சி செய்கிறோம். ஆனால் அது நடைபெறவில்லை, பவர்பிளேயில் யார் பந்து வீச வருகிறார்கள் என்பதில் நாங்கள் அதிக அக்கறை காட்டுகிறோம். முதல் அல்லது இரண்டாவது ஓவரில் விக்கெட்டை இழந்து வருகிறோம்.
பேட்டிங் வரிசையை எவ்வளவு ஆழமாக எடுத்துச் செல்ல முடியுமோ அவ்வளவு ஆழமாக எடுத்துச் செல்வதே திட்டம். டெல்லி அணி சிறப்பாக பந்து வீசியது. ஷிவம் துபே பேட்டிங் செய்யும் போது கூட, நாங்கள் விவேகத்தை எதிர்பார்த்தோம், ஆனால் எங்களால் அதை பெற முடியவில்லை” என்றார்.