ரிட்டையர் அவுட் முறையில் திலக் வர்மா வெளியேறியது ஏன்? – பயிற்சியாளர் ஜெயவர்த்தனே விளக்கம் | mi coach jayawardene explains about tilak verma retire out ipl 2025
லக்னோ: நடப்பு ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரிட்டையர் அவுட் முறையில் வெளியேறினார் மும்பை இந்தியன்ஸ் வீரர் திலக் வர்மா. அது குறித்து அந்த அணியின் பயிற்சியாளர் ஜெயவர்த்தனே விளக்கம் தந்துள்ளார்.
“ஆட்டத்தின் முக்கிய தருணத்தில் திலக் வர்மா சிறப்பாக பேட் செய்தார். மூன்றாவது விக்கெட்டை நாங்கள் இழந்ததும் சூர்யகுமார் யாதவ் உடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்தார். அவர் அடித்த ஆட விரும்பினார். இருப்பினும் முடியவில்லை. இறுதி வரை இருந்து ஏதேனும் செய்ய வேண்டும் என விரும்பினார்.
எங்களுக்கு கடைசி சில பந்துகளில் ஃப்ரெஷ் ஆன வீரர்கள் களத்தில் இருந்தால் சரியாக இருக்கும் என்ற எண்ணம் வந்தது. அதனால் அந்த உத்தியை எடுத்தோம். இது கிரிக்கெட்டில் நடக்கும். இருப்பினும் அவரை வெளியேற்றியது சிறப்பானது அல்ல. ஆட்டத்தின் சூழலை கொண்டு எடுக்கப்பட்ட முடிவு” என போட்டிக்கு பிறகு ஜெயவர்த்தனே கூறி இருந்தார்.
இந்த ஆட்டத்தில் 12 ரன்களில் லக்னோ வெற்றி பெற்றது. 204 ரன்கள் இலக்கை மும்பை விரட்டிய போது 23 பந்துகளில் 25 ரன்களை திலக் எடுத்திருந்தார். அவர் இந்த ஆட்டத்தில் இம்பேக்ட் வீரராக பேட் செய்தார். மும்பை அணியில் ரிட்டையர் அவுட் முறையில் வெளியேறிய முதல் வீரர் ஆகியுள்ளார் திலக். இருப்பினும் அதனால் மும்பை இந்தியன்ஸ் அணி பலன் அடையவில்லை.