EBM News Tamil
Leading News Portal in Tamil

12 ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது லக்னோ | ஐபிஎல் 2025 | LSG vs MI Highlights, IPL 2025


நடப்பு ஐபிஎல் சீசனின் 16-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் உடனான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

லக்னோவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச முடிவு செய்தது. லக்னோ அணிக்காக மிட்செல் மார்ஷ் மற்றும் எய்டன் மார்க்ரம் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். இதில் மார்ஷ் அதிரடியாக ஆடி ரன் குவித்தார். 31 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார். 9 பவுண்டரி மாற்று 2 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார்.

தொடர்ந்து பேட் செய்ய வந்த பூரன் 12 ரன்களிலும், ரிஷப் பந்த் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த படோனி, 19 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து வெளியேறினார். 4 பவுண்டரிகளை அவர் விளாசினார். மறுமுனையில் ஆடிய மார்க்ரம், இந்த சீசனில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார். அவர் 38 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

சமத் 4 ரன்களில் வெளியேறினார். டேவிட் மில்லர், 14 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆகாஷ் தீப், ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ரன்களை எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி.

204 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் ஓப்பனர்களாக வில் ஜாக்ஸ், ரிக்கல்டன் பேட் செய்தனர். இதில் வில் ஜாக்ஸ் 5 ரன்களில் நடையை கட்டினார். ரிக்கல்டன் 10 ரன்களுடன் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அடுத்து இறங்கிய நமன்தீப், சூர்யகுமார் கூட்டணி அடித்து ஆடியது. நமன் தீர் 46 ரன்கள், சூர்யகுமார் 67 விளாசினர். ஆனால் அடுத்து இறங்கிய திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, மிச்சல் சாண்ட்னர் ஆகியோர் பெரிதாக சோபிக்காததால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட முடியாமல் 20 ஓவர் முடிவில் தோல்வியை தழுவியது மும்பை இந்தியன்ஸ். லக்னோ அணியின் ஷர்துல் தாகுர், ஆகாஷ் தீப், ஆவேஷ் கான், திக்வேஷ் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.