EBM News Tamil
Leading News Portal in Tamil

தோனியால் சிஎஸ்கே-வுக்கு வந்த சோதனை: பிளெமிங் சொல்வது என்ன? | CSK in a tricky situation because of dhoni What Fleming says ipl 2025


சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் 43 வயது பேட்ஸ்மேன் தோனியால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சோதனையை எதிர்கொண்டுள்ளது. மூன்று ஆட்டங்களில் இரண்டு தோல்விகளை எதிர்கொண்டுள்ளது சிஎஸ்கே. இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உடனான ஆட்டத்துக்கு பிறகு சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் என்ன சொன்னார் என்பதை பார்ப்போம்.

சிஎஸ்கே விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோனி பேட்ஸ்மேனாக களம் கண்டுள்ளார். இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உடனான ஆட்டத்தில் தோனி ஏன் முன்னதாக வந்து விளையாடவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. அப்போது ஆடுகளம் குறித்து தனது பார்வையை பகிர்ந்திருந்தார் பிளெமிங். தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் உடனான ஆட்டத்தில் 16-வது ஓவரில் தோனி பேட் செய்ய களத்துக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தோனியின் முழங்கால் முன்பு போல இல்லை. அவரால் இயல்பாக விளையாட முடிகிறது. ஆனால், அவரது முழங்காலில் உள்ள பிரச்சினை நீண்ட நாட்களாக உள்ளது. ஆட்டத்தின் சூழலையும், நேரத்தையும் பொறுத்தே அவர் பேட் செய்ய வருகிறார். அந்த முடிவை அவர்தான் எடுக்கிறார். ஆட்டம் சமநிலையில் இருந்தால் முன்கூட்டி பேட் செய்ய வருவார். அப்படி இல்லாத பட்சத்தில் அணியில் உள்ள மற்ற வீரர்கள் மீது நம்பிக்கை வைக்கிறார்.

கடந்த சீசனிலேயே நான் இதை சொல்லி இருந்தேன். அவர் எங்களுக்கு மதிப்புமிக்க வீரர். விக்கெட் கீப்பிங் மற்றும் தலைமைத்துவத்தில் எங்களுக்கு பெரிதும் உதவுகிறார். அவர் 13-14 ஓவர்களில் தான் விளையாட வருவார். அதற்கு முன் கூட்டி பேட் செய்ய வருவது கடினம்” என பிளெமிங் தெரிவித்துள்ளார்.

பின்ச் ஹிட்டராக தோனியை பார்க்கிறது சிஎஸ்கே அணி. அதுவும் ஆட்டத்தின் சூழலை பொறுத்தே அவர் களம் காண்கிறார். இது அந்த அணிக்கு இந்த சீசனில் சோதனையாக அமைந்துள்ளது.