151 ரன்களில் ராஜஸ்தானை கட்டுப்படுத்திய கொல்கத்தா: வருண், மொயீன் அபாரம் | kkr restricted rajasthan royals for 151 runs wicket helping spinners ipl 2025
குவாஹாட்டி: நடப்பு ஐபிஎல் சீசனின் 6-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணியை 151 ரன்களில் கட்டுப்படுத்தியது கொல்கத்தா. குறிப்பாக கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான வருண் சக்கரவர்த்தி மற்றும் மொயீன் அலி ஆகியோர் சிறப்பாக பந்து வீசி இருந்தனர்.
குவாஹாட்டியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ரஹானே பந்து வீச முடிவு செய்தார். இந்தப் போட்டியில் கொல்கத்தாவின் முக்கிய வீரரான சுனில் நரைன் விளையாடவில்லை. அவருக்கு மாற்றாக மொயீன் அலி அந்த அணியில் இடம்பெற்றுள்ளார்.
ராஜஸ்தான் அணிக்காக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். சஞ்சு சாம்சன், 13 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் ரியான் பராக் 15 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அங்கிருந்து ராஜஸ்தான் அணியின் சரிவு தொடங்கியது. மேற்கொண்டு அந்த அணி 15 ரன்கள் சேர்ப்பதற்குள் ஜெய்ஸ்வால் (25 ரன்கள்), ஹசரங்கா மற்றும் நிதிஷ் ராணா ஆகியோரது விக்கெட்டை இழந்தது.
தொடர்ந்து சீரான இடைவெளியில் ஷுபம் துபே, துருவ் ஜுரல், ஹெட்மயர், ஆர்ச்சர் ஆகியோரும் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. இந்த ஆட்டம் நடைபெறும் மைதானத்தின் ஆடுகளம் ரன் குவிப்பதற்கு ஏதுவானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதே நேரத்தில் முதல் இன்னிங்ஸில் சுழற்பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சும் இங்கு எடுபட்டது. கொல்கத்தா வீரர் வருண் 4 ஓவர்களில் 17 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மொயீன் அலி 4 ஓவர்களில் 23 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா ஆகியோரும் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தனர். ஸ்பென்சர் ஜான்சர் ஒரு விக்கெட் கைப்பற்றி இருந்தார். 152 ரன்கள் என்ற இலக்கை கொல்கத்தா விரட்டுகிறது.