‘கேப்டனும் பயிற்சியாளரும் நம்மை நம்பினால் பாதி வேலை முடிந்து விடும்’ – வைஷாக் விஜய்குமார் | vyshak vijaykumar about pbks captain and coach ipl 2025
அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பலமான தாக்கம் ஏற்படுத்தினார் இம்பேக்ட் வீரராக களம் கண்ட பஞ்சாப் கிங்ஸ் பவுலர் வைஷாக் விஜய்குமார். 3 ஓவர்களில் 28 ரன்களை அவர் கொடுத்திருந்தார். விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை. இருந்தும் அவரது பந்து வீச்சு தான் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு உதவியது.
பேட்ஸ்மேன்கள் பந்தை பவுண்டரிக்கு விளாச முடியாத வகையில் லைன் மற்றும் லெந்த்தை பின்பற்றினார் வைஷாக். அதுவும் ரூதர்போர்டுக்கு ஆஃப் திசையில் வெளியே செல்லும் வகையில் வீசி இருந்தார். முதல் இரண்டு ஓவர்களில் மொத்தம் 10 ரன்கள் கொடுத்தார். கடைசி ஓவரில் 18 ரன்கள் கொடுத்திருந்தார்.
“நான் எனது செயல்பாட்டை எப்படி சொல்வது என தெரியவில்லை. வெற்றி பெறுகின்ற அணியின் பக்கம் நாம் இருந்தால் எத்தனை ரன்கள் கொடுத்தோம், எத்தனை விக்கெட் எடுத்தோம் என்பது எல்லாம் விஷயம் அல்ல.
இம்பேக்ட் வீரராக களம் கண்ட போது எனது பணியை செய்ய வேண்டும் என்று தான் நினைத்தேன். கேப்டனும் பயிற்சியாளரும் தெளிவான திட்டமிடலுடன் இருந்தனர். நான் அதை பின்பற்றினேன். அழுத்தம் மிகுந்த தருணம் அது. நான் மிகவும் அமைதியாக இருந்தேன். பதட்டம் கொள்ளவில்லை. எனக்கு கிடைத்த வாய்ப்பின் மூலம் அணியை வெற்றி பெற செய்ததில் மகிழ்ச்சி.
பயிற்சியின் போது செய்ததை ஆட்டத்தில் செய்தேன். முதலில் சுழற்பந்து வீச்சாளரை இம்பேக்ட் வீரராக விளையாட வைக்கும் திட்டம் இருந்தது. பனிப்பொழிவு காரணமாக திட்டம் மாறியது. என் மீது கேப்டனும் பயிற்சியாளரும் நம்பிக்கை வைத்தனர். அந்த நம்பிக்கையை பெறுகின்ற ஒரு வீரரின் வேலை களத்துக்கு செல்வதற்கு முன்பே பாதி முடிந்துவிடும்.
ஸ்டம்ப் லைனில் வீசுவது, ஸ்லோ பவுன்சர் வீசுவதும் எங்களுக்கு கைகொடுக்கவில்லை. அதனால் வொய்டு லைனில் வீசலாம் என திட்டமிட்டோம். அதை நான் செய்தேன். இதோ மீண்டும் பயிற்சி செய்து வருகிறேன். ஏனெனில், நாளைய தினம் வேறொரு நாளாக இருக்கும்” என வைஷாக் விஜய்குமார் தெரிவித்தார். கடந்த சீசனில் ஆர்சிபி அணிக்காக அவர் விளையாடி இருந்தார்.