EBM News Tamil
Leading News Portal in Tamil

‘அன்று Unsold; இன்று பஞ்சாப் கிங்ஸின் ஓப்பனர்’ – யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா? | once Unsold player now Punjab Kings opening batter Who is Priyansh Arya ipl 2025


அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனில் இளம் வீரர்கள் தங்களுக்கு அணியில் விளையாட கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது திறனை நிரூபித்து வருகின்றனர். அந்தப் பட்டியலில் சமீபத்திய சேர்க்கை தான் பிரியான்ஷ் ஆர்யா. பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்.

கடந்த சீசனுக்கான ஏலத்தில் எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்கவில்லை. இந்த முறை ரூ.3.8 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அவரை வாங்கி இருந்தது. அதோடு கிரிக்கெட் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்கின் குட் புக்கில் இடம்பெற்றுள்ள கிரிக்கெட் வீரராக பிரியான்ஷ் உள்ளார்.

இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடிய முதல் போட்டியில் 23 பந்துகளில் 47 ரன்களை அவர் எடுத்தார். 7 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும். இது தான் ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் அறிமுகமாகும் போட்டி.

யார் இவர்? – 24 வயதான பிரியான்ஷ் ஆர்யா, டெல்லியை சேர்ந்தவர். இடது கை பேட்ஸ்மேன். ஆஃப் பிரேக்கும் வீசுவார். அணியில் இவரது ரோல் ஓப்பனிங் பேட்ஸ்மேன். உள்ளூர் கிரிக்கெட்டில் டெல்லி அணிக்காக விளையாடுகிறார்.

கடந்த 2024-ம் ஆண்டில் நடைபெற்ற டெல்லி ப்ரீமியர் லீக் தொடர் மூலம் பிரியான்ஷ் லைம்லைட்டுக்குள் வந்தார். அந்த தொடரில் சவுத் டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடிய அவர், நார்த் டெல்லி ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக ஆறு சிக்ஸர்களை விளாசி இருந்தார்.

அந்த ஆட்டத்தில் 40 பந்துகளில் சதம் எட்டினார். 10 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 120 ரன்களை அவர் எடுத்தார். தொடர்ந்து சையத் முஷ்டாக் அலி டிராபி 2024-25 சீசனில் 325 ரன்களை எடுத்தார். பேட்டிங் சராசரி 41. ஸ்ட்ரைக் ரேட் 176.63. இந்த சீசனில் உத்தர பிரதேச அணிக்கு எதிராக வான்கடே மைதானத்தில் 10 சிக்ஸர்களுடன் சதம் விளாசி இருந்தார்.

இதற்கு முந்தைய சையத் முஷ்டாக் அலி டிராபி சீசனில் 222 ரன்கள் எடுத்திருந்தார். ஐபிஎல் 2024-ம் ஆண்டு சீசனுக்கான ஏலத்தில் அவர் பங்கேற்றார். இருப்பினும் அவரை எந்த அணியும் ஏலத்தில் வாங்க முன்வரவில்லை. இந்த நிலையில் ஐபிஎல் 2025-ம் ஆண்டு சீசனுக்காக பஞ்சாப் கிங்ஸ் அணி மெகா ஏலத்தில் ரூ.3.8 கோடி கொடுத்து அவரை வாங்கியது.

“பிரியான்ஷ் ஆர்யா எங்களுக்கான சிறப்புத் திறமைகள் வாய்ந்த ஒரு தொடக்க ஆட்டக்காரராக இருக்கிறார். அவரது பேட்டிங் திறமைகள் எனக்கு உற்சாகமூட்டுகிறது” என அவர் குறித்து பாண்டிங் இந்த ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக தெரிவித்திருந்தார்.

விக்னேஷ் புதூர், விப்ராஜ் நிகம், பிரியான்ஷ் ஆர்யா என வரிசையாக இளம் திறமைசாலிகள் இந்த சீசனில் இதுவரை நம்பிக்கை தரும் வகையில் செயல்திறனை வெளிப்படுத்தி விளையாடி வருகின்றனர். வரும் நாட்களில் மேலும் பலர் இதில் இணைய வாய்ப்புள்ளது. இந்த முறை ‘எமர்ஜிங் பிளேயர்’ விருதை வெல்ல சரியான போட்டி இருக்கும் என தெரிகிறது.