EBM News Tamil
Leading News Portal in Tamil

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து 2026: உலக சாம்பியன் அர்ஜென்டினா அணி தகுதி! | FIFA World Cup Football Champion Argentina qualifies after defeating Brazil


பியூனஸ் அய்ரஸ்: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு அர்ஜென்டினா அணி தகுதி பெற்றுள்ளது. ஏற்கெனவே, செவ்வாய்க்கிழமை அன்று உருகுவே உடனான ஆட்டத்தை பொலிவியா 0-0 என சமன் செய்த காரணத்தால் அர்ஜென்டினா தகுதி பெற்றிருந்த நிலையில் தகுதி சுற்றில் பிரேசில் அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

ஜூலியன் அல்வாரெஸ், என்ஸோ பெர்னாண்டஸ், அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் மற்றும் கியுலியானோ ஆகியோர் அர்ஜென்டினா அணிக்காக கோல் பதிவு செய்தனர். ஆட்டம் தொடங்கியது முதலே அர்ஜென்டினா ஆதிக்கம் செலுத்தியது. ஆறாவது நிமிடத்தில் ஜூலியன் அல்வாரெஸ் முதல் கோலை பதிவு செய்தார். 12-வது நிமிடத்தில் பெர்னாண்டஸ் தன் அணிக்காக இரண்டாவது கோலை பதிவு செய்தார்.

பிரேசில் அணி 26-வது நிமிடத்தில் கோல் பதிவு செய்தது. இருப்பினும் 37 மற்றும் 71-வது நிமிடத்தில் மேலும் இரண்டு கோல்களை அர்ஜென்டினா பதிவு செய்தது. இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா வீரர்களின் செயல்பாடு அபாரமாக இருந்தது.

தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு அணிகளுக்கான தகுதி சுற்றில் இருந்து தற்போது அர்ஜென்டினா மட்டுமே தகுதி பெற்றுள்ளது. மொத்தம் 10 அணிகள் இதில் பங்கேற்றுள்ளனர். புள்ளிப் பட்டியலில் ஈக்குவேடார், உருகுவே, பிரேசில், பராகுவே, கொலம்பியா ஆகிய அணிகள் உள்ளன. நேரடியாக ஆறு அணிகள் இந்த பிரிவில் இருந்து உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறும். 2026 உலகக் கோப்பை கால்பந்து தொடர் கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. மொத்தம் 48 அணிகள் இதில் பங்கேற்க உள்ளன. 16 நகரங்களில் போட்டிகள் நடைபெற உள்ளது.