EBM News Tamil
Leading News Portal in Tamil

அஷுதோஷ், விப்ராஜ் அதிரடி: லக்னோவை டெல்லி வென்றது எப்படி? | Delhi Capitals Win By One Wicket; Ashutosh Sharma Plays Miracle Knock IPL 2025


நடப்பு ஐபிஎல் சீசனின் 4-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடின. இதில் டெல்லி அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல், பந்து வீச முடிவு செய்தார். லக்னோ அணிக்காக எய்டான் மார்க்ரம் மற்றும் மிட்செல் மார்ஷ் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர்.

ஆரம்பம் முதலே மார்ஷ் அதிரடியாக ஆடினார். மார்க்ரம் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 36 பந்துகளில் 72 ரன்களை விளாசினார் மார்ஷ். 6 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார். பேட்டிங் ஆர்டரில் மூன்றாவது பேட்ஸ்மேனாக நிக்கோலஸ் பூரன் களம்கண்டார். அவரும் அதிரடியாக ஆடினார். 30 பந்துகளில் 75 ரன்களை அவர் எடுத்து ஆட்டமிழந்தார். இதற்கிடையில் 6 பந்துகளை எதிர்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார் லக்னோ கேப்டன் ரிஷப் பந்த்.

அங்கிருந்து லக்னோ அணியின் ரன் குவிப்பு வேகம் சரிந்தது. ஆயுஷ் பதோனி 4, ஷர்துல் தாக்குர் 0 ரன்களில் ஆட்டமிழந்தனர். முதல் 10 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 117 ரன்களை எடுத்திருந்தது லக்னோ. அடுத்த 5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை லக்னோ இழந்தது.

19-வது ஓவரில் ஷாபாஸ் அகமது 9 ரன்களில் அவுட் ஆனார். ஸ்டார்க் பந்தில் பெரிய ஷாட் ஆட முயன்று கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதே ஓவரில் ரவி பிஷ்னாய் போல்ட் ஆனார். மோஹித் சர்மா வீசிய கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுத்தது லக்னோ அணி. அந்த ஓவரில் டேவிட் மில்லர் இரண்டு சிக்ஸர்களை விளாசினார். 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது லக்னோ.

இந்தப் போட்டியில் வெற்றி பெற டெல்லிக்கு 210 ரன்கள் தேவை என்ற இலக்குடன் ஓப்பனர்கள் ஜேக் ப்ரேசர், டு ப்ளெஸ்சிஸ் களமிறங்கினர். இதில் ஜேக் ப்ரேசர் ஒரே ஒரு ரன்னில் வெளியேறினார். டு ப்ளெஸ்சிஸ் 29 ரன்கள் எடுத்தார்.

அபிஷேக் பொரேல் ஒரு ரன் கூட எடுக்காமல் அவுட் ஆனார். சமீர் ரிஸ்வி 4, அக்சர் படேல் 22 என தடுமாற்றத்துடன் தொடங்கிய அணியை, ஸ்டப்ஸ் (34), அஷுதோஷ் சர்மா (66), விப்ராஜ் நிகாம் (39) ஆகியோர் தூக்கி நிறுத்தினர். இதில் அஷுதோஷ் 5 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் அடித்து அசத்தினார். இப்படியாக 19.3 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது டெல்லி கேபிடல்ஸ் அணி.