EBM News Tamil
Leading News Portal in Tamil

விவசாயத்தை காக்க கரூரில் குளங்களை தூர் வாரும் அமெரிக்க ஐ.டி ஊழியர்! | American IT employee cleans ponds in karur


கரூர்: கரூர் மாவட்டம் கடவூரை அடுத்த வரவணையைச் சேர்ந்தவர் கந்தசாமி. ஓய்வுபெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர். வரவணை ஊராட்சி தலைவராகவும் இருந்துள்ளார். இவரது மகன் நரேந்திரன். அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் கணினி தொழில்நுட்ப ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.

விவசாயத்தை நம்பியுள்ள இப்பகுதியில் போதிய தண்ணீர் வசதி இல்லாததால் விவசாயிகள் பலரும், அந்தத் தொழிலை விட்டுவிட்டு வேலைவாய்ப்புக்காக வெளியூர்களுக்கு செல்லும் நிலை உள்ளது.

எனவே, விவசாயத்தை காக்கும் வகையில், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக வரவணை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குளங்களை தூர் வாரும் பணிகளை மேற்கொள்ள நரேந்திரன் திட்டமிட்டார். அதன்படி, சொந்த ஊருக்கு வந்திருந்த நரேந்திரன், கரூர் மாவட்ட ஆட்சியர் அனுமதியுடன் இந்தப் பகுதியில் உள்ள மத்தியமடை குளம், கோட்டபுளியப்பட்டி மணியார் மடைகுளம், கீ.த.வெள்ளப்பட்டி தலையாரி குளம், சுண்டுகுழிப்பட்டி வேலன்குளம் என 5 குளங்களை சொந்த செலவில் தூர் வாரியுள்ளார். தற்போது பாப்பான் குளத்தை தூர் வாரும் பணியை நரேந்திரன் அண்மையில் தொடங்கியுள்ளார்.

இதுகுறித்து நரேந்திரன் தெரிவித்தது: அரசுப் பள்ளியில் பயின்ற நான் தற்போது அமெரிக்காவில் பணியாற்றி வருகிறேன். விவசாயத்தை காக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் எனது சொந்த கிராமத்தில் நீர் வளத்தை பெருக்கும் வகையில் குளங்களை தூர் வாரும் பணிகளை முன்னெடுத்து வருகிறேன்.

இப்பகுதியில் உள்ள 16 குளங்ளை தூர் வார திட்டமிட்டு இதுவரை 5 குளங்கள் தூர் வாரப்பட்டுள்ளன. தற்போது 6-வது குளம் தூர் வாரப்பட்டு வருகிறது. இதன் மூலம் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து, விவசாயம் காக்கப்படும் என்றார்.