EBM News Tamil
Leading News Portal in Tamil

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு வெளிச்சம் கொடுப்பாரா அக்சர் படேல்? – IPL 2025 | does Axar Patel shows light to Delhi Capitals IPL 2025 swot analysis


டெல்லி கேப்பிடல்ஸ் அணி புதிய கேப்டன் அக்சர் படேல் தலைமையில் களமிறங்குகிறது. தொடரில் கலந்து கொண்ட 10 அணிகளில் டெல்லி அணியின் கேப்டன் மட்டுமே கடைசியாக அறிவிக்கப்பட்டார். ரிஷப் பந்த், லக்னோ அணிக்கு மாறியுள்ளதால் கேப்டனாக அக்சர் படேல் எப்படி செயல்பட போகிறார் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். வலுவான போட்டியாக திகழும் டெல்லி அணி இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

2020-ம் ஆண்டு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வி அடைந்து முதன்முறையாக பட்டம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. அடுத்த ஆண்டில் பிளே ஆஃப் சுற்று வரை முன்னேறிய டெல்லி அணி கடந்த 3 சீசன்களிலும் லீக் சுற்றுடன் நடையை கட்டியது. இம்முறை கே.எல்.ராகுல், டு பிளெஸ்ஸிஸ் வருகை அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கக்கூடும். அபிஷேக் போரெல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஜேக் பிரேசர் மெக்கர்க் ஆகியோரும் பேட்டிங்கில் அதிரடியாக செயல்படக்கூடியவர்கள். இவர்களுடன் கருண் நாயரும், சமீர் ரிஸ்வி, அஷுதோஷ் சர்மா ஆகியோரும் நம்பிக்கை அளிக்கக்கூடும்.

இதேபோன்று வேகப்பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க் வருகை உத்வேகம் அளிக்கக்கூடும். அவருடன் டி.நடராஜன், முகேஷ் குமார், அனுபவம் வாய்ந்த மோஹித் சர்மா ஆகியோரும் நம்பிக்கை அளிக்கக் கூடியவர்களாக திகழ்கின்றனர். சுழற்பந்து வீச்சில் கேப்டன் அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோர் அனுபவம் வாய்ந்தவர்கள். எனினும் இவர்களை தவிர்த்து சுழற்பந்து வீச்சாளர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அளவில் அணியில் வேறு வீரர்கள் இல்லாதது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

டெல்லி படை: அக்சர் படேல் (கேப்டன்), டூ பிளெஸ்ஸிஸ், அபிஷேக் போரெல், ஜேக் பிரேசர் மெக்கர்க், கருண் நாயர், கே.எல்.ராகுல், சமீர் ரிஸ்வி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டோனோவன் பெர்ரேரா, அஜய் மன்டல், மன்வந்த் குமார், அஷுதோஷ் சர்மா, மாதவ் திவாரி, துஷ்மந்தா சமீரா, குல்தீப் யாதவ், முகேஷ் குமார், தர்ஷன் நல்கண்டே, டி.நடராஜன், விப்ராஜ் நிகாம், மோஹித் சர்மா, மிட்செல் ஸ்டார்க், திரிபுராணா விஜய், ரீஸ் டாப்லே.

தங்கியவர்கள்: அக்சர் படேல் (ரூ.16.50 கோடி), குல்தீப் யாதவ் (ரூ.13.25 கோடி), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (ரூ.10 கோடி), அபிஷேக் போரெல் (ரூ.4 கோடி).

வெளியேறிய வீரர்கள்: ரிஷப் பந்த், டேவிட் வார்னர், அன்ரிச் நோர்க்கியா.