5 ஓவர்களில் 8 சிக்ஸர்களை தாரை வார்த்த ஷாஹின் அஃப்ரீடி, முகமது அலி – பாக். 2-வது தோல்வி | Shaheen Afridi Ali gives 8 sixes in 5 overs Pakistan 2nd defeat with new zealand
டியுனெடினில் இன்று நடைபெற்ற 2-வது சர்வதேச டி20 போட்டியில் நியூஸிலாந்து அணி பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்று முன்னிலை வகிக்கிறது.
பாபர் அசாம், ரிஸ்வான் போன்ற அனுபவ வீரர்கள் இல்லாத பாகிஸ்தான் அணி பல்வேறு கடினப்பாடுகளைச் சந்தித்து வருகிறது. சாம்பியன்ஸ் டிராபியில் ஏற்பட்ட ரூ.738 கோடி நஷ்டத்தினால் வீரர்கள் தங்குமிட வசதிகள் முதல் பல்வேறு சலுகைகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குறைத்துள்ளதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன.
புறச்சூழல்கள், உட்சூழல்கள் சரியாக இல்லாத ஒரு அணி எப்படி வெற்றிக்காக ஆட முடியும்? பல்வேறு பணபல சக்திகள் திட்டமிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட்டை சீரழித்துவிட்டன. அது முற்றிலும் அழியாமல் காப்பாற்றப்பட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியுடன் சேர்ந்து தீவிரமாக முயற்சிகள் எடுக்க வேண்டும்.
டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். வானிலை காரணமாக 20 ஓவர்கள் போட்டி 15 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணியால் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கேப்டன் சல்மான் அகா அதிகபட்சமாக 28 பந்துகளில் 4 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களுடன் 46 ரன்களை விளாச, ஷதாப் கான் 14 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்ஸர்களுடன் 26 ரன்களையும் கடைசியில் ஷாஹின் அஃப்ரீடி 14 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 22 ரன்களையும் எடுத்தனர்.
நியூஸிலாந்து தரப்பில் ஜேகப் டஃபி, பென் சியர்ஸ், நீஷம், இஷ் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இலக்கை விரட்டிய நியூஸிலாந்து அணி டிம் செய்ஃபர்ட், ஃபின் ஆலன் மூலம் காட்டடி தொடக்கம் கண்டு 28 பந்துகளில் 66 ரன்களை விளாசித்தள்ளியது. இத்தனைக்கும் ஷாஹின் அஃப்ரீடி செய்ஃபர்ட்டிற்கு மெய்டன் ஓவரை வீசி நன்றாகவே தொடங்கினார். ஆனால் அதன் பிறகு நடந்தது சரவெடி. அடுத்த மொகமது அலி ஓவரில் ஷார்ட் பிட்ச் டெலிவரிகளை வீச ஃபின் ஆலன் 3 சிக்ஸர்களை அடுத்தடுத்து விளாசினார்.
அடுத்த ஓவரில் செஃய்பர்ட் தன் ரிதத்தை மீட்டெடுக்க ஸ்கொயர் லெக் முதல் எக்ஸ்ட்ரா கவர் வரை மைதானம் நெடுக ஷாஹின் அஃப்ரீடியை 4 சிக்ஸர்களை ஒரே ஓவரில் விளாசித்தள்ளினார். முதல் 3 ஓவர்களில் 7 சிக்ஸர்கள் என்பது சர்வதேச டி20 போட்டிகளில் 3 ஓவர்களில் அதிக சிக்ஸர்களுக்கான 2வது சாதனையாக அமைந்தது. முகமது அலி இன்னொரு சிக்ஸரை கொடுக்க அஃப்ரீடியும் முகமது அலியும் 5 ஓவர்களில் 8 சிக்ஸர்கள் விளாசப்பட்டனர். அங்கேயே மேட்ச் முடிந்து விட்டது.
டிம் செய்ஃபர்ட் 22 பந்துகளில் 3 பவுண்டரிகள் 5 சிக்ஸர்களுடன் 45 ரன்களையும் ஃபின் ஆலன் 16 பந்துகளில் 1 பவுண்டரி 5 சிக்ஸர்களுடன் 38 ரன்களையும் விளாசி இருவரும் ஆட்டமிழக்க ஸ்கோர் 7-வது ஓவரில் 87 ரன்கள் என்று இலக்குக்கு அருகில் கொண்டு வரப்பட்டு விட்டது. பிறகு குஷ்தில் ஷாவும், ஹாரிஸ் ராவுஃபும் டைட்டாக வீசினர். இதுதான் பாகிஸ்தான் அணிக்கு ஒரே ஆறுதல். ஃபின் ஆலன் ஏற்கெனவே 2024-ம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக 16 சிக்ஸர்களை விளாசியவர். இந்தப் போட்டியிலும் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். நியூஸிலாந்து 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ரன்களை 13.1 ஓவரில் எடுத்து வென்றது. ஆட்ட நாயகன் விருதை டிம் செய்ஃபர்ட் வென்றார்.