EBM News Tamil
Leading News Portal in Tamil

திருக்குணகிரி மலையில் சிதைந்து வரும் சமண சிற்பங்கள் – மீட்டெடுக்குமா தொல்லியல் துறை? | sculptures maintenance issue in thiruguna giri malai at theni


தேனி: சமண மதம் வடமாநிலங்களில் உருவானாலும், தமிழ் மன்னர்களின் ஆதரவினால் தென்பகுதியிலும் பரவியது. பிறஉயிருக்கு தீங்கு இழைக்காமை, பற்றற்ற துறவற வாழ்க்கை உள்ளிட்ட பல்வேறு கோட்பாடுகளை கொண்டிருந்ததால் பலரும் இதனைப் பின்பற்றத் தொடங்கினர். மலைப்படுகையில் சமணர்கள் தங்கி கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டனர். இவர்கள் தங்கிய இடங்களில் எல்லாம் புடைப்புச் சிற்பங்களையும், வட்டெழுத்தில் பல்வேறு தகவல்களை கல்வெட்டுகளாகவும் பொறித்தனர்.

மூலிகைகள் அரைக்க சமணர்கள் பயன்படுத்திய குழி.

கழுகுமலை, மதுரை சமணர் மலை, யானைமலை, கீழவளவு, சித்தன்னவாசல், எண்ணாயிரம், கும்பகோணம், திருவண்ணாமலை-சீய மங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சமணர் படுகைகளும், கல்வெட்டுகளும் அதிகம் உள்ளன. தேனி மாவட்டத்தைப் பொருத்தளவில் உத்தமபாளையம்-கோம்பை சாலை திருக்குணகிரி மலையில் சமணச் சின்னங்கள் அதிகம் உள்ளன.

இது சுமார் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்ததாகும். சமணர்கள் இந்த மலைப்படுகையில் தங்கி மருத்துவம், மதவழிபாடு உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர். ஏராளமான புடைப்புச் சிற்பங்களையும் அவர்கள் வடிவமைத்துள்ளனர்.

மண்டப பகுதிக்கு போடப்பட்டுள்ள பூட்டு.

இவர்கள் தங்கி வாழ்ந்த இடம் இன்றைக்கும் வரலாற்று சின்னங்களுடன் காட்சியளித்து வருகிறது. தற்போது இது தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் எவ்வித பராமரிப்போ, கண்காணிப்போ இல்லை.

இதனால் இந்தமலை பலவிதங்களிலும் சிதைந்து வருகிறது. இந்த மலையின் பல இடங்களிலும் மூலிகை அரைக்கப்பட்ட குழிகள், புடைப்புச் சிற்பங்கள், அணையா விளக்கு தூண், வட்டெழுத்து கல்வெட்டுகள், சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்கள், சுனை உள்ளிட்டவை உள்ளன. திறந்தவெளியாக கிடக்கும் இந்த பாரம்பரிய பகுதியை பலரும் மது அருந்துதல் உள்ளிட்ட தவறான செயல்களுக்கே அதிகம் பயன்படுத்துகின்றனர்.

சுகாதாரமில்லாமல் துர்நாற்றத்துடன் காணப்படும் சுனை

சிறிய உயிருக்குக்கூட பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதை வாழ்வியல் கோட்பாடாகவே கடைப்பிடித்தவர்கள் சமணர்கள். அந்தளவுக்கு அஹிம்சையை கடைப்பிடித் தவர்கள் செதுக்கிய சிற்பங் களுக்கு அருகிலேயே மது அருந்துபவர்கள் பல்வேறு இறைச்சியையும் சமைத்து உண்டு வருகின்றனர்.

மலையைச் சுற்றி அமைக்கப்பட்டஇரும்பு வேலிகளை சமூகவிரோதிகள் உடைத்து எடுத்துச் சென்று விட்டனர். பல ஏக்கர் பரப்பளவுள்ள இந்த இடத்தை தற்போது பலரும் ஆக்கிரமித்து விட்டனர். இந்த மலைப்பகுதியை திறந்தவெளிக் கழிப்பிடமாகவும், குப்பைகள், கழிவுகள் கொட்டும் பகுதியாகவும் மாற்றி விட்டனர். தொடர் புகார்களை அடுத்து புடைப்புச் சிற்பங்கள், சுனை, சிற்ப மண்டப பகுதிக்குச் செல்ல முடியாத அளவுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது.

சிதைந்த நிலையில் உள்ள புடைப்புச் சிற்பங்கள்

எந்த வகையிலும் உள்ளே சென்று விடாத அளவுக்கு முள்வேலிகளும் பரவலாக அமைக்கப்பட்டுள்ளன. இதனால் சமணச் சின்னங் களைப் பார்க்கவோ, அக்கால வரலாற்று பின்னணியை தெரிந்து கொள்ளவோ முடியாத நிலை உள்ளது.

இதுகுறித்து தேனி மாவட்ட வரலாற்று ஆய்வு மையத் தலைவர் சோ.பஞ்சுராஜா கூறுகையில், வெளிநாடுகளில் எல்லாம் தொன்மையை பாதுகாக்கவும், வரலாற்று சின்னங்களை பராமரிக்கவும் அதிக கவனம் செலுத்துகின்றனர்.

சோ.பஞ்சுராஜா

ஆனால், இந்த திருக்குணக்கிரி மலை தற்போது சிதைந்த நிலையில் உள்ளது. இம்மலையை சீரமைத்து நுழைவுக் கட்டணம் மூலம் பார்வையாளர்களை அனுமதிக்கலாம். தன்னார்வலர்கள் மூலம் தூய்மைப்பணி, வரலாற்று நிகழ்வுகளை இங்கு நடத்தலாம். இதன்மூலம் இந்த ஊரின் பாரம்பரியமும் அடுத்தடுத்த தலைமுறைக்குச் செல்லும் நிலை உருவாகும் என்றார்.