பிறப்பு சான்றிதழ் மோசடி வழக்கில் லக்சயா சென் மீது நடவடிக்கை எடுக்க தடை | Action against Lakshya Sen in birth certificate fraud case stayed
பாட்மிண்டன் வீரர் லக்சயா சென் மீது நடவடிக்கை எடுக்க கர்நாடக போலீஸாருக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாட்மிண்டன் வீரர் லக்சயா சென், பிறந்த தேதியை மாற்றி மோசடி செய்துள்ளார் என்று கூறி கர்நாடகாவைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
அதில், லக்சயா சென் மற்றும் அவரது சகோதரர் சிராக் சென் ஆகியோரின் பெற்றோர் திரேந்திரா, நிர்மலா சென், அவரது சகோதரரும், பயிற்சியாளரும், கர்நாடக பாட்மிண்டன் சங்க ஊழியரும் சம்பந்தப்பட்டுள்ளனர் என்றும், கர்நாடக அரசின் நலத்திட்டங்களைப் பெறுவதற்காகவும், வயதைக் குறைத்து அதற்குரிய போட்டிகளில் பங்கேற்பதற்காகவும் இந்த சான்றிதழ் மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அந்த மனுவில் கூறியிருந்தார்.
இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் லக்சயா சென் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நாகராஜின் மனுவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் லக்சயா சென் தாக்கல் செய்த மனு நேற்று நீதிபதிகள் சுதான்ஷு துலியா, கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் மனுவைத் தாக்கல் செய்த நாகராஜு, கர்நாடக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் லக்சயா சென், சிராக் சென் ஆகியோர் மீது மறு உத்தரவு வரும்வரையில் எந்தவித நடவடிக்கையையும் கர்நாடக போலீஸார் எடுக்கக்கூடாது என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.