‘பாகிஸ்தான் அணியை தோனி வழிநடத்தினாலும் வெல்ல முடியாது’ – சனா மிர் தாக்கு | Pakistan not able to win even dhoni led captaincy Sana Mir
சென்னை: சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடி வரும் பாகிஸ்தான் அணியை தோனியே வழிநடத்தினாலும் தோல்வி உறுதி என பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சனா மிர் கூறியுள்ளார்.
நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறி உள்ளது. நியூஸிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளுடன் பாகிஸ்தான் தோல்வியை தழுவியதன் மூலம் முதல் சுற்றோடு வெளியேறியது. இது அந்த நாட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. இந்நிலையில், சனா மிர் தெரிவித்தது:
“சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி இரண்டாவது விக்கெட்டை இழந்த போது எனது நண்பர் எனக்கு மெசேஜ் செய்திருந்தார். ‘அவ்வளவு தான் ஆட்டம் முடிந்தது’ என அதில் சொல்லி இருந்தார். ‘தொடருக்கான அணியை அறிவித்த போது எல்லாம் முடிந்துவிட்டது’ என நான் ரிப்ளை கொடுத்தேன். அணி அறிவிப்பிலேயே தொடரை பாதி அளவு இழந்தோம்.
இந்தியாவின் முன்னாள் கேப்டன் தோனி அல்லது பாகிஸ்தான் முன்னாள் வீரர் யூனிஸ் கான் ஆகியோர் இந்த அணியை வழிநடத்தினாலும் வெல்ல முடியாது. இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி வீரர்கள் உள்நாட்டு ஆடுகளங்களில் விளையாடுவதற்கு சரியான சாய்ஸ் அல்ல. ஒரு போட்டி துபாயில் இருந்தது. அணியில் சுழற்பந்து வீச்சாளர்கள் அதிகம் இல்லை. இரண்டு பார்ட்-டைம் சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் இருந்தனர். சிறந்த ஆட்டத்தில் வெளிப்படுத்தும் வீரருக்கு அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது.
மொத்தத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பெரிய அளவில் நிர்வாக ரீதியாக மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும்” என சனா மிர் தெரிவித்தார்.