கடைசி ஆசையை நிறைவேற்ற ஆஸ்திரேலியரின் உடல் பிஹாரில் அடக்கம் | Australian body buried in Bihar to fulfill last wish
பாட்னா: இந்தியாவுக்கு 12-வது முறையாக பயணம் மேற்கொண்டபோது, இறந்த ஆஸ்திரேலியரின் உடல் அவரது விருப்பப்படி இந்தியாவிலேயே அடக்கம் செய்யப்பட்டது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்தவர் டொனால்ட் சாம்ஸ்(91). ராணுவத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது தந்தை, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின்போது அசாம் மாநிலத்தில் பணியாற்றினார். இதனால் டொனால்ட் சாம்ஸ்க்கு இந்தியா மீது பற்று ஏற்பட்டது. அவர் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும்போதெல்லாம் அசாம் மாநிலத்துக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். கொல்கத்தாவில் இருந்து பாட்னாவுக்கு கங்கை நதியில் பயணம் செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார். இவர் தனது உயிலில், இறப்புக்குப்பின் எனது உடலை இந்தியாவில் அடக்கம் செய்ய வேண்டும் என எழுதியிருந்தார்.
இவர் சமீபத்தில் 12-வது முறையாக இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார். அவருடன் 42 பேர் அடங்கிய ஆஸ்திரேலிய குழுவினரும் இந்தியா வந்தனர். இவர்கள் பிஹாரின் சுல்தான் கன்ச் பகுதியிலிருந்து பாட்னாவுக்கு கங்கை நதியில் சொகுசு கப்பலில் வந்தனர். இந்த பயணத்தின்போது டொனல்ட் சாம்ஸ்க்கு உடல்நிலை குன்றியது. இதனால் சொகுசு கப்பல் பபுவா படித்துறையில் நின்றது. அங்கிருந்து டொனால்ட் சாம்ஸ் முங்கர் நகரில் உள்ள தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது மனைவி ஆலிஸ் சாம்ஸ் இந்தியாவில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகத்தை தொடர்பு கொண்டு, தனது கணவர் விருப்பப்படி அவரது உடலை இந்தியாவில் அடக்கம் செய்ய வேண்டுகோள் விடுத்தார். ஆஸ்திரேலிய தூதரகத்தின் வேண்டுகோள்படி டொனால்ட் சாம்ஸ் உடலை முங்கர் நகரின் சுரம்பா பகுதியில் உள்ள கிறிஸ்தவ இடுகாட்டில் அடக்கம் செய்ய தேவையான ஏற்பாடுகளை முங்கர் மாவட்ட ஆட்சியர் அவினிஸ் குமார் சிங் செய்தார்.
டொனால்ட் சாம்ஸ்க்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ள வேண்டாம் என அவரது மனைவி ஆலிஸ் கூறிவிட்டார். இதனால் கிறிஸ்தவ முறைப்படி அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதன் மூலம் டொனால்ட் சாம்ஸின் விருப்பம் நிறைவேற்றப்பட்டுள்ளது.