EBM News Tamil
Leading News Portal in Tamil

“டெல்லி தேர்தலில் பாஜகவின் ‘பி’ டீமாக செயல்பட்டது காங்கிரஸ்!” – ராகுலுக்கு மாயாவதி பதிலடி | Cong fought Delhi polls as BJP’s B-team – Mayawati hits Rahul Gandhi


லக்னோ: “டெல்லி பேரவைத் தேர்தலில் பாஜகவின் ‘பி’ டீமாக காங்கிரஸ் கட்சி செயல்பட்டது. அக்கட்சிதான் தேசிய தலைநகரில் பாஜகவின் வெற்றிக்கு உதவியது” என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார். 2024 மக்களவைத் தேர்தலில் பிஎஸ்பி நிலைப்பாடு குறித்து ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு மாயாவதி இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவருமான ராகுல் காந்தி, “2024 மக்களவைத் தேர்தலின்போது மாயாவதி இண்டியா கூட்டணியில் இணைந்து போட்டியிட்டிருந்தால் பாஜகவால் வெற்றி பெற்றிருக்க முடியாது” என்று தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தனது எக்ஸ் பக்கத்தில் தொடர் பதிவிட்டுள்ளார்.

இந்தியில் உள்ள அந்தப் பதிவில், “இந்த முறை நடந்த டெல்லி பேரவைத் தேர்தலில் பாஜகவின் பி டீமாக காங்கிரஸ் கட்சி செயல்பட்டது. அதனால்தான் பாஜகவால் அங்கு ஆட்சிக்கு வர முடிந்தது என்று ஒரு பொதுவான விவாதம் உள்ளது. இல்லையென்றால் காங்கிரஸின் நிலைமை இந்த அளவுக்கு மோசமாக ஆகியிருக்காது. பல தொகுதிகளில் அக்கட்சி வேட்பாளர்களால் டெபாசிட் கூட பெற முடியவில்லை. எனவே, காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி எந்த ஒரு விஷயத்திலும் மற்றவர்களை, குறிப்பாக பிஎஸ்பி மற்றும் அதன் தலைமையை சுட்டிக்காட்டுவதை விட, தன்னுடைய நிலை என்ன என்பதை பார்ப்பது நல்லது. இது ராகுலுக்கான எனது அறிவுரை.

அதேபோல் டெல்லியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாஜக அரசுக்கு, அதன் தேர்தல் வாக்குறுதிகளை, குறிப்பாக மக்கள் நலன் மற்றும் வளர்ச்சி தொடர்பான வாக்குறுதிகளை சரியான நேரத்தில் நிறைவேற்ற வேண்டிய சவால் உள்ளது. இல்லையென்றால் எதிர்காலத்தில் பாஜகவின் நிலைமை என்பது காங்கிரஸ் கட்சியை விட மிகவும் மோசமடைந்து விடும்” என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.

ராகுல் பேச்சு: முன்னதாக, உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலியில் பட்டியல் பிரிவு மாணவர்களிடம் உரையாடிய அந்தத் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, “மாயாவதி ஏன் தேர்தலில் சரியான இடத்தில் இருந்து போட்டியிடவில்லை. அவர் எங்களுடன் (இண்டியா கூட்டணி) இணைந்து பாஜகவுக்கு எதிராக போட்டியிட வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். என்றாலும், சில காரணங்களுக்காக மாயாவதி அவ்வாறு செய்யவில்லை. இது எங்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது. ஏனென்றால், அனைத்துக் கட்சிகளும் இணைந்து போட்டியிட்டிருந்தால் பாஜகவால் வெற்றி பெற்றிருக்க முடியாது” என்று தெரிவித்திருந்தார்.

மாயாவதி சாடல்: ராகுலின் இந்தக் கருத்துக்கு உடனடியாக எதிர்வினையாற்றியிருந்த மாயாவதி, “எங்கெல்லாம் காங்கிரஸ் கட்சி வலுவாகவோ அல்லது ஆட்சியில் உள்ளதோ அங்கெல்லாம் அக்கட்சி பிஎஸ்பி மீது பகைமையும், சாதிய மனோபாவமும் காட்டுகிறது. ஆனால், உத்தரப் பிரதேசம் போல காங்கிரஸ் கட்சி பலவீனமாக உள்ள மாநிலங்களில் பிஎஸ்பியுடன் கூட்டணி என்ற ஏமாற்றுப் பேச்சுவார்த்தை இருக்கும். இதுதான் காங்கிரஸின் இரட்டை நிலைப்பாடு” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.