EBM News Tamil
Leading News Portal in Tamil

21 மாநிலங்களில் ஆட்சி செய்யும் நிலையில் பாஜகவின் ஒரே பெண் முதல்வர் ரேகா குப்தா | Rekha Gupta is only woman Chief Minister of BJP ruling states


புதுடெல்லி: கடந்த 1974 ஜூலை 19-ம் தேதி ஹரியானா​வின் ஜுலானா பகுதி​யில் ரேகா குப்தா பிறந்தார். அவரது தந்தை ஜெய் பகவான் ஜிண்​டால், பாரத ஸ்டேட் வங்கி​யில் மேலாளராக பணியாற்றினார். தந்தை​யின் பணி காரணமாக, குடும்பம் டெல்​லிக்கு இடம்பெயர்ந்​தது. டெல்லி பல்கலைக்​கழகத்​தில் பயின்​ற​போது, ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்​யார்த்தி பரிஷத்​தில் ரேகா குப்தா இணைந்​தார். டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவராக பணியாற்றினார். பி.காம் முடித்த பிறகு, காஜி​யாபாத் ஐஎம்​ஐஆர்சி கல்லூரி​யில் சட்டம் பயின்று வழக்​கறிஞரானார்.

கல்லூரி காலம் முதலே அரசி​யலில் தீவிர ஆர்வம் காட்டிய ரேகா குப்தா, டெல்லி மாநகராட்சி தேர்​தலில் போட்டியிட்டு 3 முறை கவுன்​சிலராக தேர்ந்​தெடுக்​கப்​பட்​டார். டெல்லி பாஜக​விலும் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்​தார். ரேகா குப்தா, இத்தேர்தலில் டெல்லி ஷாலி​மார் பாக் தொகு​தி​யில் போட்​டி​யிட்டு முதல்​முறையாக எம்எல்​ஏவாக தேர்வு செய்​யப்​பட்​டார்.

இந்த தேர்​தலில் டெல்லி பெண்கள் பெரு​வாரியாக பாஜக​வுக்கு வாக்​களித்​த​தால் 27 ஆண்டு​களுக்கு பிறகு தலைநகரில் பாஜக ஆட்சி​யை கைப்​பற்றியது. எனவே, பெண்களுக்கு மரியாதை செலுத்​தும் வகையில் பெண் முதல்வர் பதவி​யேற்றுள்​ளார் என கட்சி வட்டாரங்கள் தெரி​வித்​துள்ளன.

நாடு முழு​வதும் 21 மாநிலங்​களில் பாஜக மற்றும் அந்த கட்சி தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்​ட​ணி ஆட்சி நடைபெறுகிறது. இந்த சூழலில், பாஜக​வின் ஒரே பெண் முதல்வர் என்ற பெரு​மையை ரேகா குப்தா பெற்றுள்​ளார். நாட்டில் 28 ​மாநிலங்​கள், 8 யூனியன் பிரதேசங்​கள் உள்ளன.

இ​தில், மேற்​கு ​வங்​கத்​தில் மட்டுமே பெண் முதல்​வர் (மம்தா பானர்ஜி) ஆட்சி நடத்து​கிறார். அவருக்கு அடுத்து நாட்​டின் 2-வது பெண்​ ​முதல்வர்​ என்ற பெருமையை ரே​கா பெற்​றுள்​ளார்.

துணை முதல்வர் பர்வேஷ் சர்மா: முதல்வர் ரேகா குப்தா, உள்துறை, நிதி, சேவை, ஊழல் தடுப்பு துறைகளை தன்வசம் வைத்துள்ளார். ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் சாகிப் சிங் வர்மாவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. அவரிடம் கல்வி, பொதுப்பணி, போக்கு வரத்து துறைகள் வழங்கப்பட்டு உள்ளது.

அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சாவிடம் சுகாதாரம், ஊரக வளர்ச்சி, தொழில் துறை, அமைச்சர் ரவீந்தர் இந்த்ராஜ் சிங்கிடம் சமூக நலம், எஸ்சி, எஸ்டி நலன், தொழிலாளர் நலத் துறை, அமைச்சர் கபில் மிஸ்ராவிடம் நீர்வளம், சுற்றுலா, கலாச்சாரம், அமைச்சர் பங்கஜ் குமார் சிங்கிடம் சட்டம், வீட்டு வசதித் துறை, அமைச்சர் ஆசிஷ் சூட்டிடம் வருவாய், சுற்றுச்சூழல், உணவு, பொது விநியோகத் துறை வழங்கப்பட்டு உள்ளது.