EBM News Tamil
Leading News Portal in Tamil

உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது லோக்பாலுக்கு அதிகாரம் உண்டு என்ற உத்தரவு நிறுத்திவைப்பு | Supreme Court stays Lokpal’s order that it has jurisdiction over High Court judges


புதுடெல்லி: உயர் நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் அதிகார வரம்புக்கு உட்பட்டவர்களே என்ற ஊழல் தடுப்பு லோக்பாலின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது.

ஒரு வழக்கில் ஒரு தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக உயர் நீதிமன்ற நீதிபதி செயல்பட்டதாக அவருக்கு எதிராக லோக்பாலில் புகார் அளிக்கப்பட்டது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் அதிகார வரம்புக்கு உட்பட்டவர்களே என லோக்பால் தீர்ப்பளிக்க அந்த வழக்கே அடிப்படையாக அமைந்தது. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான லோக்பால் அமர்வு கடந்த ஜனவரி 27-ம் தேதி இந்த உத்தரவினை பிறப்பித்தது.

அந்த அமர்வு தனது உத்தரவில், “2013 ஆம் ஆண்டு லோக்பால் சட்டத்தின் பிரிவு 14(1) இன் உட்பிரிவு (f) இல் ‘எந்தவொரு நபரும்’ லோக்பால் வரம்புக்குள் வருவார் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் பொது ஊழியர்களே. எனவே, அவர்கள் லோக்பால் சட்டத்தின் வரம்பிற்குள் வருவார்கள். லோக்பால் வரம்புக்குள் உயர் நீதிமன்ற நீதிபதி வரமாட்டார் என்று வாதிடுவது மிகவும் அப்பாவித்தனமான வாதமாக இருக்கும்” என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில், லோக்பாலின் இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ள நீதிபதிகள் பி.ஆர். கவாய், சூர்யா காந்த் மற்றும் ஏ.எஸ். ஓகா ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் லோக்பால் அதிகார வரம்புக்குள் வருவார்கள் உத்தரவை நிறுத்தி வைத்தது. மேலும், இது தொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் பி.பி. சுரேஷ் ஆகியோரின் உதவியை கோரியுள்ளது.

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வு பிறப்பித்த லோக்பால் உத்தரவு “தொந்தரவு” அளிப்பதாகவும், நீதித்துறையின் சுதந்திரத்தைப் பற்றி கவலை அளிப்பதாகவும் நீதிபதி கவாய் தெரிவித்துள்ளார்.