பிப்.26-ல் முடியும் மகா கும்பமேளா நீட்டிக்கப்படுமா? – பிரயாக்ராஜ் மாவட்ட நிர்வாகம் விளக்கம் | Will the Maha Kumbh Mela be extended
புதுடெல்லி: உ.பி.யின் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி 13 முதல் மகா கும்பமேளா நடைபெறுகிறது. 144 வருடங்களுக்கு பிறகு வந்துள்ளதாகக் கருதப்படும் இந்த நிகழ்வு, திரிவேணி சங்கமத்தில் தொடர்கிறது. இந்த விழா பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேதிகளை நாடு முழுவதிலும் உள்ள துறவிகளின் சபைகளான 13 அகாடாக்கள் முடிவு செய்கின்றன. இதில் அரசு தலையிட முடியாது.
மகா கும்பமேளாவில் நேற்று வரை 54 கோடிக்கும் அதிகமானவர்கள் வந்து புனிதக்குளியலை முடித்துள்ளனர். மகா கும்பமேளாவில் குவியும் கூட்டம் குறைவதாகத் தெரியவில்லை. மகா கும்பமேளாவிற்கு வருபவர்கள் அதன் அருகிலுள்ள வாராணசியின் காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் அயோத்தி ராமர் கோயிலுக்கும் செல்கின்றனர். இதன் காரணமாக அந்த இரண்டு நகரங்களிலும் கூட கூட்டம் குவிகிறது.
75 நாட்கள் வரையும்.. இதுகுறித்து உ.பி.யின் முன்னாள் முதல்வரான அகிலேஷ், ‘இன்னும் கூட பொதுமக்கள் திரளான எண்ணிக்கையில் மகா கும்பமேளாவில் புனிதக்குளியல் முடிக்க விரும்பி அது, அவர்களால் முடியவில்லை. இதற்கு முந்தைய ஆண்டுகளில் 75 நாட்கள் வரையும் கூட கும்பமேளா நடைபெற்றுள்ளது. எனவே, மூத்த குடிகளும் நிம்மதியாக புனிதக்குளியல் முடிக்க மகா கும்பமேளாவின் நாட்களை உ.பி. அரசு நீட்டிக்க வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.
இதையடுத்து, மகா கும்பமேளா பிப்ரவரி 26 க்கு பிறகும் நீட்டிக்கப்படும் எனப் புரளிகள் கிளம்பியுள்ளன. சமூகவலைதளங்களிலும் இந்த நீட்டிப்பு மீதானத் தகவல்கள் பல்வேறு வகையில் பரவி வருகின்றன. இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் பிரயாக்ராஜ் மாநகரக் காவல்துறையின் கூடுதல் ஆணையரும் தமிழருமான டாக்டர் என்.கொளஞ்சி கூறும்போது, ‘பண்டிதர்களால் பஞ்சாங்கம் உள்ளிட்ட பல ஆய்விற்கு பின் முடிவானது பிப்ரவரி 26 மகா சிவராத்ரி நாளுடன் முடிவடைகிறது. எங்கள் முதல்வர் தலைமையிலும், நேரடிக் கண்காணிப்பிலும் பொதுமக்களுக்கு பிரச்சினை வராமல் அதிகக் கவனம் செலுத்தப்படுகிறது. இத்துடன், மகா கும்பமேளாவினால் பிரயாக்ராஜ் வாசிகளுக்கும் எந்த இடையூறும் வராதபடி நடவடிக்கைகள் கடைபிடிக்கப்படுகின்றன.
மகா கும்பமேளா பற்றி பரவும் வதந்திகளையும் உடனடியாக விசாரித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துகிறோம். பிரயாக்ராஜின் ரயில் நிலையங்கள் மூடப்பட்டதாகக் கூறப்படுவது தவறு. முன் அறிவிப்பின்றி இதுபோல் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. கும்பமேளா நாட்களில் நடைபெற்ற தேர்வை தவறவிட்ட சில மாணவர்களுக்கு அவற்றை எழுத வாய்ப்பு அளிக்கவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது’ எனத் தெரிவித்தார்.