கொல்கத்தா: ஐஎஸ்எல் தொடரில் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி, ஈஸ்ட் பெங்கால் எஃப்சி அணிகள் மோதின. இதில், சென்னையின் எஃப்சி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
21-வது நிமிடத்தில் சென்னையின் எஃப்சி அணியின் இர்பான் யத் வாத்திடம் கிராஸை பெற்ற வில்மர் ஜோர்டான் கில், கோல்கம்பத்துக்கு நெருக்கமாக இருந்தபடி அடித்த பந்து கோல் வலையின் இடது கார்னரை துளைத்தது. இதனால் சென்னையின் எஃப்சி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களின் முடிவில் சென்னையின் எஃப்சி அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதையடுத்து காயங்களுக்கு இழப்பீடாக 7 நிமிடங்கள் வழங்கப்பட்டது. இதன் கடைசி நிமிடத்தில் டேனியல் சிமா சுகவு அசத்தலாக கோல் அடிக்க சென்னையின் எஃப்சி அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. சென்னையின் எஃப்சி அணிக்கு இது 5-வது வெற்றியாக அமைந்தது.
20 ஆட்டங்களில் விளையாடி உள்ள சென்னையின் எஃப்சி அணி 5 வெற்றி, 6 டிரா, 9 தோல்விகளுடன் 21 புள்ளிகள் பெற்று ஒரு இடம் முன்னேறி 10-வது இடத்தை பிடித்துள்ளது.
நடப்பு சசீசனில் கடந்த டிசம்பர் 7-ம் தேதி சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணி 2-0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எஃப்சி அணியை வீழ்த்தியிருந்தது. இந்த தோல்விக்கு தற்போது சென்னையின் எஃப்சி அணி பதிலடி கொடுக்கும் விதமாக இந்த ஆட்டம் அமைந்திருந்தது.