பெண்கள் பாதுகாப்புக்கு செயலியுடன் இணைந்த காலணி: உத்தர பிரதேச மாணவர்கள் சாதனை | UP students design SOS sandals for women safety
லக்னோ: பெண்களின் பாதுகாப்புக்கு எஸ்ஓஎஸ் எச்சரிக்கை அனுப்பும் வகையில் காலணி ஒன்றை உத்தர பிரதேச மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.
பெண்களின் பாதுகாப்புக்கு கடந்த 20 ஆண்டுகளில் பெப்பர் ஸ்பிரே, ரேப் விஷில், டாக்சியில் எஸ்ஓஎஸ் பட்டன் என ஏராளமான பாதுகாப்பு பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது புதுமை கண்டுபிடிப்பாக பாதுகாப்பு அம்சத்துடன் கூடிய செருப்பை பள்ளி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். உத்தர பிரதேசத்தின் மகாராஜ்கன்ஜ் மாவட்டத்தில் உள்ள ஆர்பிஐ சி பள்ளியில் பயிலும் அம்ரித் திவாரி, கோமல் ஜெய்ஸ்வால் என்ற மாணவர்கள் இந்த காலணியை தயாரித்துள்ளனர்.
இந்த காலணி செல்போன் செயலியுடன் இணைக்கப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், இந்த செருப்பின் அடியில் உள்ள பட்டனை அழுத்தினால் போதும், அது எஸ்ஓஎஸ் எச்சரிக்கையை குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நம்பிக்கைக்குரியவர்களின் செல்போனுக்கு அனுப்பிவிடும். இந்த எச்சரிக்கை மூலம் காலணி அணிந்திருப்பவரின் இருப்பிடத்தை கண்டறிய முடியும். இதில் உள்ள மைக் மூலம் காலணி அணிந்திருப்பவரின் இடத்தில் நடைபெறும் உரையாடல்களை கேட்க முடியும். இந்த காலணி வைத்து தாக்குதல் நடத்துபவரை மிதித்தால், அதில் இருந்து பாயும் மின்சாரம் தாக்குதல் நடத்துபவரை நிலைகுலைய செய்யும். அதே நேரத்தில் அணிந்திருப்பவருக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.
இந்த காலணி குறித்து இதை தயாரித்த மாணவர்கள் கூறுகையில், “நாங்கள் உருவாக்கிய செயலி, காலணியில் இருந்து செல்போனுக்கு எச்சரிக்கை தகவல் அளிக்கும் தொழில்நுட்பத்தை இணைக்கிறது. காலணியில் கேமிராவை பொருத்தவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் காலணி அணிந்திருப்பவரை சுற்றி என்ன நடைபெறுகிறது என்பதை அறியலாம். பெண்களின் பாதுகாப்பை மனதில் வைத்தே இந்த காலணியை நாங்கள் உருவாக்கியுள்ளோம்” என்றனர்.