வெளிமாநிலத்தவரை சுட்டு கொன்ற சம்பவம்: ஜம்மு காஷ்மீரில் 6 இடங்களில் என்ஐஏ சோதனை | NIA Conducts Raids At 6 Locations In Kashmir
பஞ்சாப்பை சேர்ந்த இருவர் காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஜம்மு காஷ்மீரின் 3 மாவட்டங்களில் லஷ்கர் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய 6 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
ஜம்மு காஷ்மீரில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த யாராவது பணியாற்றினால், அவர்கள் குறிவைத்து கொல்லப்படுகின்றனர். பஞ்சாப்பைச் சேர்ந்த அம்ரித்பால் சிங், ரோஹித் மாசி ஆகியோர் ஸ்ரீநகரின் ஷாஹித் கன்ஜ் பகுதியில் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 7-ம் தேதி சுடப்பட்டனர். இதில் அம்ரித்பால் சம்பவ இடத்திலேயே இறந்தார். ரோஹித் மாசி மருத்துவமனையில் இறந்தார்.
இந்த கொலையின் பின்னணியில் லஷ்கர் -இ- தொய்பா மற்றும் அதன் ஆதரவு அமைப்பான தி ரெசிஸ்டன்ட் பிரன்ட் (டிஆர்எப்) தீவிரவாதிகள் இருப்பது தெரியவந்தது. இவர்கள் உள்ளூர் நபர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி காஷ்மீரில் மத்திய அரசுக்கு எதிராக தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபடுவது விசாரணையில் தெரியவந்தது.
இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை ( என்ஐஏ) கடந்த ஜூன் 15-ம் தேதி வழக்குப்பதிவு செய்து 4 பேர் மீது குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்தது. இந்நிலையில் ஸ்ரீநகர், புத்காம் மற்றும் சோபூர் மாவட்டங்களில் லஷ்கர் மற்றும் டிஆர்எப் தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் 6 பேரின் வீடுகளில் நேற்று முன்தினம் சோதனை நடத்தப்பட்டன. அங்கு சட்டவிரோத ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.