EBM News Tamil
Leading News Portal in Tamil

‘DeepSeek’ AI – உலக அளவில் கவனம் ஈர்க்கும் சீன தேச ஏஐ அசிஸ்டன்ட் | chinese ai startup deepseek artificial intelligence


சென்னை: உலக அளவில் புது பாய்ச்சலோடு பயனர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது சீன தேச ஸ்டார்ட்அப் நிறுவனமான டீப்சீக்கின் ஏஐ அசிஸ்டன்ட். இப்போதைக்கு ஏஐ உலகில் அதிகம் பேசப்படும் ஏஐ அசிஸ்டன்ட்டாக இது உள்ளது.

கடந்த 2023-ல் இந்த நிறுவனம் நிறுவப்பட்டது. ஹை-ஃப்ளையர் என்ற நிறுவனம் இதன் தாய் நிறுவனமாகும். சீன தொழிலதிபர் லியாங் வென்ஃபெங் தான் இதன் நிறுவனர். இந்த சூழலில் ஏஐ உலகில் முன்னோடியாக உள்ள சாட்ஜிபிடி-யை அமெரிக்காவில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளது டீப்சீக்.

பல கோடி முதலீட்டில் கூகுள், மெட்டா, எக்ஸ் மாதிரியான டெக் நிறுவனங்களும், சாட்ஜிபிடி-யின் தாய் நிறுவனமான ஓபன் ஏஐ-யும் பல ஆண்டுகளாக மேற்கொண்ட ஏஐ முயற்சியினை வெறும் சில ஆண்டுகளில் தகர்த்துள்ளது டீப்சீக். கடந்த 2023-ல் இந்த முயற்சி தொடங்கப்பட்டது. டீப்சீக் கோடர், எல்எல்எம், டீப்சீக்-வி2, டீப்சீக்-வி3 மற்றும் டீப்சீக்-ஆர்1 லைட் பதிப்புகள் வெளியாகி உள்ளன.

இதில் டீப்சீக்-வி3 தற்போது பரவலான பயனர்களால் பயன்படுத்தப்படுகிறது. அதன் எதிர் விளைவுதான் அமெரிக்காவில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் முதலிடம் பிடிக்க காரணம். இது அமெரிக்க டெக் வல்லுநர்களின் பாராட்டினை பெற்றுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் தான் டீப்சீக்-வி3 பொது பயன்பாட்டுக்கு வெளியானது. கடந்த 8-ம் தேதி இந்தியாவிலும், 10-ம் தேதி அமெரிக்காவிலும் இது அறிமுகமானது. வலைதளம் மற்றும் செயலி வடிவில் இதனை பயனர்கள் பயன்படுத்தலாம். தமிழ் மொழியிலும் இதை பயன்படுத்த முடியும்.

கதை, கட்டுரை, கவிதை, கணக்கு உள்ளிட்டவற்றை விரைந்து நொடி பொழுதில் தருகிறது டீப்சீக் ஏஐ. இப்போதைக்கு இதில் டெக்ஸ்ட் வடிவில் மட்டுமே பயனர்கள் உரையாட முடிகிறது. டீப்சீக்-வி3 வெர்ஷனை வெறும் 5.58 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 14.8 டிரில்லியன் டோக்கன்களின் டேட்டா செட்களை வெறும் 55 நாட்களில் பயிற்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.