தொழிலதிபர்களின் கடன் ரூ.10 லட்சம் கோடி தள்ளுபடி: பாஜக அரசு மீது கேஜ்ரிவால் குற்றச்சாட்டு | Kejriwal accuses BJP Rs 10 lakh crore loan waiver for industrialists
புதுடெல்லி: மத்தியில் ஆளும் பாஜக அரசு சுமார் 500 தொழிலதிபர்களின் ரூ.10 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்திருக்கிறது என்று ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் குற்றம் சாட்டி உள்ளார்.
வரும் 5-ம் தேதி டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. தேர்தலையொட்டி ஆம் ஆத்மியும் பாஜகவும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த சூழலில் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 500 தொழிலதிபர்களின் ரூ.10 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்திருக்கிறது. இதில் குறிப்பிட்ட ஒரு தொழிலதிபருக்கு ரூ.46,000 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. மற்றொரு தொழிலதிபர் ரூ.6,500 கோடி கடனை திருப்பி செலுத்த வேண்டும். அந்த தொழிலதிபருக்கு ரூ.5,000 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.
நாட்டில் ஏழைகள், நடுத்தர வர்க்க மக்கள் பல்வேறு வகைகளில் அரசுக்கு வரி செலுத்துகின்றனர். ஜிஎஸ்டி வரி விதிப்பு, மக்களின் மீது மிகப்பெரிய சுமையை ஏற்படுத்தி இருக்கிறது. இவ்வாறு பெறப்படும் வரியை மக்கள் நலன்களுக்கு செலவிட வேண்டும். தொழிலதிபர்களின் கடன்களை தள்ளுபடி செய்யக்கூடாது. இவ்வாறு அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.