EBM News Tamil
Leading News Portal in Tamil

கேஜ்ரிவாலின் கட்-அவுட்டை யமுனையில் மூழ்கச் செய்து டெல்லி பாஜகவினர் நூதன பிரச்சாரம் | BJP takes Arvind Kejriwal’s poster for a dip amid Delhi Yamuna showdown


புதுடெல்லி: டெல்லி பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின் மையமாகவே யமுனை நதி மாறியுள்ளது. முன்னாள் முதல்வர் கேஜ்ரிவாலின் ஆளுயர கட்-அவுட்டை யமுனை நதியில் மூழ்கச் செய்து, ஆம் ஆத்மி தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என பாஜக நூதன தாக்குதல் தொடுத்துள்ளது.

சனிக்கிழமை காலையில் புதுடெல்லி பேரவைத் தொகுதியின் பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா படகு ஒன்றில், டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆளுயர கட்-அவுட்டுடன் யமுனை நதியில் பயணம் செய்தார். அவருடன் கட்சி சகாக்களும் இருந்தனர். அப்போது பாஜக வேட்பாளர், கேஜ்ரிவாலின் உருவப் படத்தை ஊடகங்களின் முன்னிலையில் யமுனையில் பல முறை மூழ்கடித்தார்.

அரவிந்த் கேஜ்ரிவாலின் கட்-அவுட் தனது இரு கரங்களை காதுகளில் தோப்புக் கரணம் போடுவது போல வைத்துக் கொண்டிருந்தது. அதன் தலைக்கு மேல் இருந்த பலூன் அமைப்பில் கேஜ்ரிவால் பேசுவது போல ‘நான் தோல்வியடைந்து விட்டேன், 2025-க்குள் யமுனையை தூய்மைப்படுத்த தவறி விட்டேன். எனக்கு வாக்களிக்க வேண்டாம்’ என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

பின்பு பேசிய வர்மா, “யமுனை நதியை நாம் முழுமையாக தூய்மைப்படுத்த முடியும். அதைத் தூய்மைப்படுத்துவது ஒன்றும் ராக்கெட் அறிவியல் இல்லை. இயந்திரங்கள் கொண்டு அனைத்து வண்டல் மண்ணையும் வெளியே எடுத்து, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்பட வேண்டும். நமது பிரதமர் மோடி, சபர்மதி நதியில் செய்தது போல, நாம் யமுனை நதியில் செய்ய முடியும். அதற்கு 11 வருடங்கள் என்பது மிக நீண்ட காலம்” என்று தெரிவித்தார்.

டெல்லி மக்களை பெரும் கவலைக்குள்ளாக்கி வரும் யமுனை நதி மாசு இந்தப் பேரவைத் தேர்தலின் முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது. 2025-ம் ஆண்டுக்குள் யமுனையைச் தூய்மையாக்குவோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற ஆம் ஆத்மி தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

வார்த்தைப் போர் புரிந்த அரசியல் தலைவர்கள்: இதனிடையே, யமுனை நதிநீர் மாசு தொடர்பாக உத்தப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், கேஜ்ரிவாலை சாடியிருந்தார். இதனைத் தொடர்ந்து, இண்டியா கூட்டணி சகாவும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஆதரவாக களத்தில் குதித்தார். அவர், “மதுராவில் ஓடும் யமுனை நதியில் இருந்து ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்துக் குடிக்கும் தைரியம் இருக்கிறதா?” என்று ஆதித்யநாத்துக்கு சவால் விடுத்தார்.

டெல்லி கல்காஜி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அல்கா லம்பா, பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் யமுனையை அரசியல் பிரச்சினையாக சுருக்கி விட்டதாக குற்றம்சாட்டினார். மேலும், வாய்ப்பு கிடைத்தால் யமுனை நதியை துய்மை செய்வதன் மூலம் காங்கிரஸ் தனது பணியை வெளிப்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

டெல்லியின் 70 தொகுதிகளுக்கு பிப்ரவரி 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. வாக்குகள் 8-ம் தேதி எண்ணப்படுகின்றன. இந்தத் தேர்தல் களத்தில் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.