EBM News Tamil
Leading News Portal in Tamil

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் நேரம் 3 நிமிடங்களாக அதிகரிப்பு: மெட்டா அப்டேட் | instagram updates reels time to 3 minutes


மென்லோ பார்க்: சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் நிறுவனம் சில முக்கிய அப்டேட்களை அறிவித்துள்ளது. அதன்படி இப்போது ரீல்ஸ் பதிவுக்கான நேரம் மூன்று நிமிடங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

மெட்டா நிறுவனத்தின் போட்டோ மற்றும் வீடியோ ஷேரிங் சமூக வலைதளம்தான் இன்ஸ்டாகிராம். கடந்த 2010-ல் தொடங்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில் மெட்டா (அப்போது ஃபேஸ்புக்) அதனை வாங்கியது. இன்று உலக அளவில் மாதந்தோறும் சுமார் 1 பில்லியன் ஆக்டிவ் பயனர்கள் இன்ஸ்டாகிராம் தளத்தை பயன்படுத்தி வருவதாக தெரிகிறது. இந்த தளத்தில் பயனர்களின் பயன்பாட்டு அனுபவத்துக்காக அவ்வப்போது புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம்.

அந்த வகையில் ரீல்ஸ்களுக்கான நேரம் மூன்று நிமிடங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், சதுர வடிவிலான ப்ரொபைல் கிரிட் இப்போது செவ்வக (ரெக்டேங்குலர்) வடிவ மாற்றம் மற்றும் நண்பர்களுக்கு லைக் செய்த ரீல்ஸ்களைக் ஷோ செய்வது போன்ற அம்சங்கள் தற்போதைய அப்டேட்களாக மெட்டா வழங்கியுள்ளது. இருப்பினும் ரீல்ஸ் நேரம் நீட்டிப்பை தவிர மற்ற இரண்டு அம்சங்கள் விரைவில் பயன்பாட்டுக்கு கிடைக்கும் என தகவல்.

3 நிமிட ரீல்ஸ்: யூடியூப் ஷார்ட்ஸ் போலவே இன்ஸ்டா தளத்தில் ரீல்ஸ் நேரம் மூன்று நிமிடங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்பு இது வெறும் 90 நொடிகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதை இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசேரி உறுதி செய்துள்ளார்.

அமெரிக்காவில் டிக்-டாக் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அதற்கு மாற்று முயற்சியாக இதை மெட்டா நிறுவனம் கையில் எடுத்துள்ளதாக டெக் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.