EBM News Tamil
Leading News Portal in Tamil

திபெத் நிலநடுக்கம்: உயிரிழப்பு 95 ஆக அதிகரிப்பு, 200+ காயம் | Tibet earthquake Death toll rise and hundreds injured


திபெத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

சீனாவின் ஒரு பகுதியாக உள்ள திபெத்தில், நேபாள எல்லைப் பகுதியையொட்டி செவ்வாய்க்கிழமை காலை 6.35 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. திபெத்தில் உள்ள மலைப்பகுதியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி இருந்தது. இதனால் திபெத், நேபாள நாடுகள் நிலநடுக்கத்தில் குலுங்கின. இந்த பயங்கர நிலநடுக்கம் ரிக்டரில் 7.1 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த நிலநடுக்கம் திபெத்தின் ஜிசாங்க் பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்டதால் அப்பகுதியில் கடுமையான சேதம் ஏற்பட்டது. இங்கு வசிக்கும் மக்கள் கடும் பீதி அடைந்தனர். கட்டிடங்கள் குலுங்கியதால் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.

நிலநடுக்கம் காரணமாக திபெத்தின் ஷிகாட்சே நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புப் படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இடிந்த வீடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 95 பேர் உயிரிழந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர் என தகவல் வெளியானது.

அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. பாதிப்பு அதிகமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. நிலநடுக்கம் காரணமாக திபெத்தில் 1,000-த்துக்கும் அதிகமான வீடுகளில் விரிசல் போன்றவை ஏற்பட்டன.

பிஹார், டெல்லியில் நில அதிர்வு: திபெத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவின் வட மாநிலங்களிலும் உணரப்பட்டது. பிஹார், டெல்லி, அசாம், மேற்கு வங்கம் உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்தியா மட்டுமல்லாமல் நேபாளம், பூடான் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.

இப்பகுதியில் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களில் இருந்த மின்விசிறி, விளக்குகள் நிலநடுக்க பாதிப்பால் லேசாக அசைந்தன. பிஹார் தலைநகர் பாட்னா, முசாபர்பூர், மோதிஹாரி, பெட்டையா ஆகிய மாவட்டங்களிலும் நிலநடுக்கம் அதிகமாக உணரப்பட்டது. மேலும், டெல்லி-என்.சி.ஆர். மற்றும் வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் கடுமையான நில அதிர்வுகள் உணரப்பட்டன.

திபெத் நிலநடுக்கம் காரணமாக நேபாளத்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என்று முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடைசியாக நேபாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 7.8 என பதிவானது. அந்த நிலநடுக்கத்தால் 9 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். நேபாள நாட்டின் வரலாற்றில் நிலநடுக்கம் காரணமாக ஏராளமான பேர் உயிரிழந்தது அப்போதுதான். சுமார் 10 லட்சம் வீடுகள் இடிந்து நாசமாயின என்பது குறிப்பிடத்தக்கது.