நீதித்துறை அதிகாரிகள் இந்தியாவில் மேற்கொள்ள இருந்த பயிற்சியை ரத்து செய்தது வங்கதேசம் | Bangladesh scraps judicial officials’ training in India
டாக்கா: இரு நாட்டு ஒப்பந்தப்படி வங்கதேச நீதித்துறை அதிகாரிகள் இந்தியாவில் மேற்கொள்ள இருந்த பயிற்சியை அந்நாட்டு ரத்து செய்துள்ளது.
வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா இருந்தபோது, அந்நாட்டின் நீதிபதிகள், நீதித்துறை அதிகாரிகள் இந்தியாவில் பயிற்சி மேற்கொள்ள ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. பயிற்சித் திட்டங்களுக்கான அனைத்துச் செலவையும் இந்திய அரசே ஏற்க ஒப்புக்கொள்ளப்பட்டது. அதன்படி, இந்த ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் உள்ள தேசிய நீதித்துறை அகாடமி மற்றும் மாநில நீதித்துறை அகாடமியில் பயிற்சி நடைபெற இருந்தது.
உதவி நீதிபதிகள், மூத்த உதவி நீதிபதிகள், கூட்டு மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதிகள், கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதிகள், மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதிகள் மற்றும் பிற அதிகாரிகள் என 50 பேர் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். இதற்கு அந்நாட்டு அரசும் கடந்த டிசம்பர் 30-ம் தேதி அனுமதி அளித்திருந்தது.
இந்நிலையில், இந்த பயிற்சி திட்டத்தை வங்கதேச இடைக்கால அரசு ரத்து செய்து நேற்று (ஜன. 5) அறிவிப்பை வெளியிட்டது. இதனை சட்ட அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
டாக்காவில் நடந்த மாணவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி பிரதமர் ஷேக் ஹசீனா புதுடெல்லிக்கு தப்பி வந்தார். அப்போது அவர் தனது பதவியையும் ராஜினாமா செய்தார். இதையடுத்து, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஆகஸ்ட் 8-ம் தேதி பதவி ஏற்றது. இதன் தொடர்ச்சியாக, வங்கதேசத்தில் வாழும் சிறுபான்மை இந்துக்கள் மீதும் அவர்களின் வழிபாட்டுத் தலங்கள் மீதும் தொடர் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.
இது தொடர்பான தனது கவலையை இந்தியா வங்கதேசத்துக்கு தெரிவித்தது. குறிப்பாக இந்து துறவி ஒருவர் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. இத்தகைய சம்பவங்கள் இந்தியா – வங்கதேசம் இடையே கசப்பை ஏற்படுத்தி இருந்தது. நீதிபதிகள் பயிற்சி திட்டம், இரு தரப்பு உறவை மேம்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக கருதப்பட்ட நிலையில், அதனை வங்கதேச அரசு ரத்து செய்திருப்பது கவனிக்கத்தக்கது.