EBM News Tamil
Leading News Portal in Tamil

3-வது டி 20 போட்டியிலும் வங்கதேசம் அணி வெற்றி | Bangladesh team wins the 3rd T20 match as well


மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி தொடரை 3-0 என முழுமையாக வென்றது.

கிங்ஸ்டவுனில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜாகர் அலி 41 பந்துகளில், 3 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 72 ரன்கள் விளாசினார். பர்வேஷ் ஹோசைன் 39, மெஹிதி ஹசன் மிராஸ் 29, தன்ஷிம் ஹசன் ஷகிப் 17 ரன்கள் சேர்த்தனர்.

மேற்கு இந்தியத் தீவுகள் அணி தரப்பில் ரோமாரியோ ஷெப்பர்டு 2 விக்கெட்கள் கைப்பற்றினர். 190 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 16.4 ஓவர்களில் 109 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ரோமாரியோ ஷெப்பர்டு 33, ஜான்சன் சார்லஸ் 23, நிக்கோலஸ் பூரன் 15 ரன்கள் சேர்த்தனர். வங்கதேச அணி தரப்பில் ரிஷாத் ஹோசைன் 3 விக்கெட்களை வீழ்த்தினர். தஸ்கின் அகமது, மகேதி ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரை முழுமையாக 3-0 என கைப்பற்றி கோப்பையை வென்றது.